உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு கடத்தலுக்கு எதிராக பெல்ஜியம் கோர்ட்டில் வைர வியாபாரி மெஹுல் சோக்சி மேல்முறையீடு

நாடு கடத்தலுக்கு எதிராக பெல்ஜியம் கோர்ட்டில் வைர வியாபாரி மெஹுல் சோக்சி மேல்முறையீடு

புதுடில்லி: நாடு கடத்தப்படுவதற்கு பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில், வைர வியாபாரி மெஹுல் சோக்சி மேல்முறையீடு செய்துள்ளார். மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி ஆகியோர் இணைந்து வைர வியாபாரம் செய்து வந்தனர். மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் அவர்கள், வெளிநாடு தப்பிச் சென்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பி சென்றார். அங்கிருந்து, தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர். அவர் ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தார். இதற்கிடையே, மத்திய அரசு, அவரை நாடு கடத்தும் முயற்சியை துவக்கியது. வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நீதிமன்றம், கடந்த மாதம் 15ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மெஹுல் சோக்சி மேல்முறையீடு செய்துஉள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, மெஹுல் சோக்சிக்கான சிறையை மும்பையில் தயார் செய்யும் பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளது, இந்த வழக்கில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ