புடாவிலும் முறைகேடு நடந்ததா? விசாரணைக்கு 6 பேர் குழு!
பல்லாரி: 'புடா' எனும் பல்லாரி நகர மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடப்பதாக, அரசுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருவர் கடிதம் எழுதினர். முறைகேடு குறித்து விசாரிக்க, நகர மேம்பாட்டுத் துறை குழு அமைத்துள்ளது.'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டுமனை ஒதுக்கியதில் 5,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீதும் வழக்கு பதிவானது.இந்நிலையில், 'புடா' எனும் பல்லாரி நகர மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடப்பதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பல்லாரி பரத் ரெட்டி, கம்பிளி கணேஷ் ஆகியோர், அரசுக்கு சமீபத்தில் கடிதம் எழுதினர்.கடிதத்தில், 'புடாவில் முறைகேடு நடக்கிறது. தலைவர் ஆஞ்சநேயலு தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கோடிக்கணக்கில் அரசு பணத்தை கொள்ளை அடிக்கிறார். 'லே - அவுட்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் கோல்மால் நடக்கிறது. புடா முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.இதையடுத்து, புடாவில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு குறித்து விசாரிக்க, நகர மேம்பாட்டுத் துறை நேற்று ஒரு குழு அமைத்தது. அந்த குழுவில், வெவ்வேறு துறைகளின் அதிகாரிகள் ஆறு பேர் இடம் பெற்று உள்ளனர்.முடாவில் நடந்த முறைகேடு வெளியே வந்ததும், நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் அலட்சியமாக செயல்பட்டதால், சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், புடா முறைகேட்டில் பைரதி சுரேஷ் உடனடியாக சுதாரித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.புடா தலைவர் ஆஞ்சநேயலு, துணை முதல்வர் சிவகுமாரின் தீவிர ஆதரவாளர். கடந்த பிப்ரவரியில் தான், புடா தலைவராக நியமிக்கப்பட்டார். பதவிக்கு வந்து எட்டு மாதங்களில் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து இருப்பது, பல்லாரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.