| ADDED : அக் 24, 2025 06:10 AM
புதுடில்லி: 'தலைநகர் டில்லி - சீனாவின் ஷாங்காய் இடையே அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை துவக்கப்படும்' என, சீனாவின் 'ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. நம் நாட்டுக்கும் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே கடந்த 2002 முதல் நேரடி விமான போக்குவரத்து சேவையை, சீன 'ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் அளித்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 2020ல் இரு நாடுகள் இடையேயான விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து லடாக் எல்லை பிரச்னையால் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 'இந்தியா - சீனா இடையே இந்த மாத இறுதியில் மீண்டும் நேரடி விமான சேவை துவங்கும்' என, கடந்த 2ல் நம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதன்படி, வரும் 26 முதல், மேற்கு வங்கத்தின் கொல்கட்டா மற்றும் சீனாவின் குவாங்ஷோ இடையே நேரடி விமான சேவையை, 'இண்டிகோ' விமான நிறுவனம் இயக்க உள்ளது. இதை தொடர்ந்து, சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நவ., 9 முதல், ஷாங்காய் - டில்லி இடையே விமான சேவையை துவக்க உள்ளது. இந்த சேவை புதன், சனி, ஞாயிறு என வாரத்தில் மூன்று நாட்கள் கிடைக்கும். 'இதன் மூலம் இரு நாடுகள் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு விரிவடையும்' என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.