நீண்ட துாரம் இயக்கப்படும் விமானங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுரை
                            வாசிக்க நேரம் இல்லையா?
                             செய்தியைக் கேளுங்கள் 
                              
                             
                            
புதுடில்லிஇந்திய விமானங்களுக்கு பாக்., வான் வழி மூடப்பட்டதால், நீண்ட துாரம் இயக்கப்படும் விமானங்களில் அனைத்து வசதிகளையும் தயாராக வைத்திருக்கும்படி, விமான நிறுவனங்களுக்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, எந்த நிமிடமும் போர் வெடிக்கும் சூழல் உள்ளது. பாக்., வான் வழியாக இந்திய விமானங்கள் பறப்பதற்கு அந்நாடு தடை விதித்தது. இதனால், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மாற்று அட்டவணை
மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட், கஜகஸ்தானின் அல்மாதி ஆகிய நகரங்களுக்கு மே 7 வரை விமானங்களை ரத்து செய்வதாகவும், 50 சர்வதேச விமானங்களின் பயண நேரத்தை அதிகரித்து மாற்று அட்டவணையையும் இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்தது.இந்நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:வான்வழி கட்டுப்பாடு காரணமாக, பயண நேரம் அதிகரிக்கும் என்பதால், பயணியருடன் தொடர்பு, விமானத்தில் உணவு வசதி, மருத்துவம் மற்றும் மாற்று விமான நிலைய ஏற்பாடு, பயணியர் சேவையில் தயார் நிலை, அனைத்து பிரிவுகளுடனும் ஒத்துழைப்பு ஆகிய ஐந்து விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பம், எரிபொருள் போன்றவற்றுக்காக வழியில் நிறுத்தப்படும் விமான நிலையங்கள் பற்றிய தகவலை செக்-இன், போர்டிங், இ - மெயில், எஸ்.எம்.எஸ்., உட்பட சாத்தியமான அனைத்து வழிகளிலும் தெரிவிக்க வேண்டும். இடையூறு
விமானத்தில் முழு பயணத்துக்கும் போதுமான உணவு, பானங்கள், மருந்து, முதலுதவி வசதி இருப்பதை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். முன்பதிவு செய்வோருக்கு தாமதம் மற்றும் இடையூறுகள் பற்றி விளக்கி கூற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.