அதிகாரிகள் அலட்சியத்தால் மாற்றுத்திறனாளி வாகனங்கள் பாழ்
கொப்பால்: அதிகாரிகளின் அலட்சியத்தால், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய 125க்கும் மேற்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் துருப்பிடித்து வீணாகின்றன.மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மாநில அரசு பல்வேறு திட்டங்களை வகுக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவிடுகிறது. இந்த திட்டங்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால், பயனாளிகளை சென்றடைவது இல்லை. அரசும், கண்டு கொள்ளாதது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.மாநிலத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்க, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை முடிவு செய்தது. இதற்காக கடந்தாண்டு பயனாளிகளிடம் விண்ணப்பம் கோரி, அவர்களின் பட்டியல் தயாரித்தது.மாவட்ட வாரியாக மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டன. கொப்பால் நகரின் மாற்றுத் திறனாளிகளுக்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.நடப்பாண்டு மார்ச் மாதமே, மூன்று சக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். அப்போது லோக்சபா தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், வாகனங்களை வழங்க முடியவில்லை. தேர்தல் முடிந்து பல மாதங்களாகியும், பயனாளிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.கொப்பால் நகரின் சுரபி முதியோர் ஆசிரமத்தில், 125க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று சக்கர வாகனங்கள் வினியோகிக்க டெண்டர் பெற்ற நிறுவனம் ஆர்.சி., கார்டுகளை அனுப்ப தாமதம் செய்தது. தற்போது கார்டுகள் வந்துள்ளதால், பயனாளிகளை அழைத்து வாகனங்களை வழங்குவதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.'சரியான நேரத்தில் வழங்கியிருந்தால், பயனாளிகளுக்கு உதவியாகவும், வாகனங்கள் நன்றாகவும் இருந்திருக்கும். ஆனால் திறந்த வெளியில் மழையிலும், வெயிலிலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பழுதடைந்திருக்கும். இதை வழங்குவதால் எந்த பயனும் இல்லை' என, பயனாளிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.