உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண மூட்டை விவகாரத்தில் நீதிபதி வர்மாவின் மனு... தள்ளுபடி!: விசாரணையை எதிர்த்த வழக்கில் கோர்ட் அதிரடி

பண மூட்டை விவகாரத்தில் நீதிபதி வர்மாவின் மனு... தள்ளுபடி!: விசாரணையை எதிர்த்த வழக்கில் கோர்ட் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாதி எரிந்த நிலையில் பண மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், உள்விசாரணை குழுவின் விசாரணைக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை, நம்பிக்கையை விதைக்கும் வகையில் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மா, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கடந்த மார்ச் 14ம் தேதி அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தபோது, அந்த வீட்டின், 'ஸ்டோர் ரூமில்' இருந்து பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், அவரது நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டது. விதி மீறவில்லை இதையடுத்து, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய உள்விசாரணை குழுவை அமைத்தார். இந்தக் குழு, 10 நாட்கள் விசாரணை நடத்தி, 55 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றது. பின்னர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், 'நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கும் நடவடிக்கையை துவங்கலாம்' என, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பார்லிமென்டுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் பார்லி.,யில் துவங்கியுள்ளன. இந்தச் சூழலில், உள்விசாரணை குழுவின் விசாரணை அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி, உச்ச நீதி மன்றத்தில் யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் நடந்த விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பளிக்கப் பட்டது. அதன் விபரம்: பதவியில் இருக்கும் நீதிபதியின் நடத்தை குறித்து விசாரிக்க, உள்விசாரணை குழுவை அமைக்க சட்டத்தில் இடமிருக்கிறது. உள்விசாரணை குழுவின் பரிந்துரையை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்து, பதவி நீக்குவதற்கு பரிந்துரை செய்ததிலும் அரசியல் சாசனம் மீறப்படவில்லை. அரசியல் சாசன வழிமுறைகளை பின்பற்றியே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த உள்விசாரணை குழுவை அமைத்தார். எனவே, உள்விசாரணை குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும், சட்ட விதிகளை மீறி, உள்விசாரணை குழுவும் விசாரணை நடத்தவில்லை. பதவி நீக்கம் நீதிபதி வர்மாவின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலோ, அதை மீறும் வகையிலோ உள்விசாரணை குழு நடந்து கொள்ளவில்லை. பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா ஆட்சேபம் தெரிவிக்கவும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அனைத்து சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டிருக்கின்றன. எனவே, நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பால், தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.- டில்லி சிறப்பு நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி