உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 17 பேர் மர்ம மரண விவகாரம் டாக்டர்கள் விடுமுறை ரத்து

17 பேர் மர்ம மரண விவகாரம் டாக்டர்கள் விடுமுறை ரத்து

ஜம்மு - காஷ்மீரின் பாதல் கிராமத்தில் அடுத்தடுத்து 17 பேர் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர், அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர்.

அறிகுறிகள்

மேலும், பாதிக்கப்பட்ட 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் இறந்தவர்களுக்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த உயிரிழப்பு களுக்கு, தொற்று பாதிப்போ, பாக்டீரியாவோ காரணம் அல்ல என அதில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ரஜோரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் அமர்ஜீத் சிங் பாட்டியா கூறியதாவது:மருத்துவ எச்சரிக்கை காரணமாக விடுமுறையில் உள்ள டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. குளிர்கால விடுமுறையும் ஊழியர்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் அரசும் கூடுதலாக 10 மருத்துவ மாணவர்களை ரஜோரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.

தீவிர கண்காணிப்பு

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூன்று பேரின் உடல்நலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த குடும்பத்தினரும் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிலையில் பாதல் கிராமம், கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ