ஆவணங்களில் முறைகேடு; அரசு வேலையில் மோசடி
போபால் : மத்திய பிரதேசத்தில், இல்லாத தாயை இறந்ததாகக் கூறி போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, ஒருவர் அரசு வேலை பெற்று மோசடியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள தியோந்தர் என்ற இடத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ் கோல். இவர், ஜவுடோரி என்ற இடத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 'பியூன்' ஆக உள்ளார். அரசுப் பள்ளி உதவி ஆசிரியையான தன் தாய், பேலா காளி கோல் இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் வேலை அளிக்கும்படி விண்ணப்பித்து இந்த வேலையை பெற்றார். இதற்காக, தாய் இறந்ததற்கான சான்றிதழ் உட்பட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்து பிரிஜேஷ் கோல் பணியில் சேர்ந்தார்.இந்த சூழலில், பணியில் இருந்த பிரிஜேஷுக்கு சம்பளம் வழங்குவதற்காக, அவர் சமர்ப்பித்த ஆவணங்களை பள்ளி முதல்வர் ஆய்வு செய்தார். இதில், பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருந்ததை அடுத்து மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தகவல் அளித்தார்.அது தொடர்பான விசாரணையில், சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்பது வெளிச்சத்துக்கு வந்தது. கல்வித்துறையில் பணியாற்றி இறந்ததாக கூறப்படும் பேலா காளி கோல், பிரிஜேஷின் தாய் இல்லை என்பதும், பேலா கல்வித் துறையில் வேலை செய்யவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, பிரிஜேஷின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது. மோசடி குறித்து விசாரிக்க மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நடத்திய விசாரணையில், மேலும் ஐந்து பேர் இதுபோல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பணி நியமனம் பெற்றது தெரியவந்தது.மத்திய பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசடியைத் தொடர்ந்து, சமீபத்தில் பணி நியமனம் வழங்கப்பட்ட நபர்களின் ஆவணங்களை மீண்டும் ஆய்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 36 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன. இதில், 10 பேரின் ஆவணங்களில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, சோதனை செய்யப்பட்டன. முடிவில், ஐந்து பேர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்தது கண்டறியப்பட்டது. அவர்களின் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய எழுத்தர் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பிரதீபா பால்ரேவா மாவட்ட கலெக்டர்