உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூடா முறைகேடு தொடர்பான ஆவணங்கள்... வெளியீடு! சித்தராமையாவுக்கு குமாரசாமி கிடுக்கிப்பிடி

மூடா முறைகேடு தொடர்பான ஆவணங்கள்... வெளியீடு! சித்தராமையாவுக்கு குமாரசாமி கிடுக்கிப்பிடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'மூடா' முறைகேட்டில், முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, சில ஆவணங்களை மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி வெளியிட்டுள்ளார். மேலும், 'தனக்கு மனைகள் வழங்கும்படி முதல்வரின் மனைவி பார்வதி, மூடாவிற்கு கடிதம் எழுதியபோது, சித்தராமையா முதல்வராக தான் இருந்தார். இதனால், மூடா அதிகாரிகள் என்ன தான் செய்ய முடியும்?' எனவும், அவர் கேள்வி எழுப்பினார்.கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 14 வீட்டு மனைகள் வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கவர்னரிடம் அறிக்கை

ஆனால், தன் மனைவியிடம் கையகப்படுத்தப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக, சட்டப்படி தான் 14 மனைகள் வழங்கப்பட்டன என, முதல்வர் கூறி வருகிறார். ஆனால், மனைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறிய சமூக ஆர்வலர்கள், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அவற்றை தாக்கல் செய்தனர். தற்போது, இந்த விவகாரம் உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.இந்நிலையில், மாநில ம.ஜ.த., தலைவரும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கை:முதல்வர் மனைவியிடம் கையகப்படுத்திய நிலத்திற்கு மாற்றாக, 40:60 விகிதத்தில் மனை வழங்கப்படும் என, முதல்வரின் மனைவிக்கு, 'மூடா' தெரிவித்தது. இதை ஏற்க அவர் மறுத்து விட்டார்.கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு ஈடாக அதே அளவு மனைகள் வழங்க வேண்டும் என, முதல்வரின் மனைவி, 'மூடா'விற்கு கடிதம் எழுதியுள்ளார். பின், 50:50 விகிதத்தில் மனைகள் வழங்கும்படி கடிதம் எழுதியுள்ளார்.மூடா முறைகேட்டில், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் தொடர்பு இல்லை என, முதல்வர் கூச்சலிடுகிறார். அவருக்கு, கன்னட மொழி நன்கு தெரியும் என நினைக்கிறேன். தான் வழக்கறிஞர் எனவும் முதல்வர் சொல்லிக் கொள்கிறார்.அப்படிப்பட்ட நீங்கள், ஆவணங்களை ஒருமுறை விழி மேல் விழி வைத்து படித்துப் பாருங்கள். 50:50 விகிதத்தில் மனைகள் வழங்கியே ஆக வேண்டும் என, முதல்வரின் மனைவி கடிதம் எழுதி, மூடாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

சூப்பர் முதல்வர்

முதல்வர் மனைவி கூறுவது போல், இது வெறும் குறிப்பா அல்லது உத்தரவா? இதற்கு, 'சூப்பர் முதல்வர்' தான் பதில் அளிக்க வேண்டும். உங்கள் மனைவி கடிதம் எழுதியபோது, நீங்கள் விதான் சவுதாவின் மூன்றாவது மாடியில் உள்ள முதல்வர் இருக்கையில் அமர்ந்து இருந்தீர்கள்.அப்போது, மூடா அதிகாரிகள் என்ன தான் செய்ய முடியும்? கடிதத்தில் இருந்த வார்த்தை, 'ஒயிட்னர்' வைத்து அழிக்கப்பட்டதா என்பதை முதல்வர் தான் கூற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இத்துடன், மூடாவிற்கு முதல்வரின் மனைவி எழுதிய கடிதத்தையும், குமாரசாமி வெளியிட்டுள்ளார்.'மூடா' விதிகளின்படி, கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பில் 40 சதவீதம் அளவுக்கு மனைகளும், 60 சதவீதம் தொகையும் தரப்படும். ஆனால், முதல்வர் மனைவி பார்வதி 50 சதவீதம் தொகையும், 50 சதவீதம் அளவுக்கு மனைகளும் கோரி 2014ல் கடிதம் எழுதியுள்ளார். அப்போது, மாநில முதல்வராக சித்தராமையா தான் இருந்தார்.அதே நேரம், பார்வதி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது, அதாவது 2022ல் தான் மனைகள் ஒதுக்கப்பட்டன. அப்போது நான் ஆட்சியில் இல்லை என்று முதல்வர் கூறுகிறார்.ஆயினும், மனைகள் ஒதுக்குவதற்காக, 'மூடா'வில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, அதில் ஒரு உறுப்பினராக இருந்த சித்தராமையாவின் மகனும், அப்போதைய வருணா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான யதீந்திரா பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 07:28

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதனை சித்து விற்கு யாரவது INDI கூட்டணியினர் சொல்லுங்களேன்


Kasimani Baskaran
ஆக 24, 2024 06:54

அரசு நிலம் எடுத்தால் சந்தை மதிப்பை விட ஐந்தில் ஒன்று அல்லது நாலில் ஒன்று என்ற அளவில் பணம் கொடுப்பார்கள். அதற்க்கு ஈடாக ஏராளாமாக வீட்டு மனையாகவே வாங்குவது முறைகேடு இல்லாமல் என்னவாம்.


சமீபத்திய செய்தி