புதுடில்லி : இந்தியா -- பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது, எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பது தொடர்பான கேள்விக்கு, ''எத்தனை என்பது முக்கியமல்ல; ஏன் வீழ்த்தப்பட்டன என்பதே முக்கியம்,'' என, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்., 22ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மாதம் 7ம் தேதி, நம் படைகள், ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தின.இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி, தாக்குதல்களில் ஈடுபட்டன. இவ்வாறு 10ம் தேதி வரை, நான்கு நாட்கள் நடந்த மோதலை நிறுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்த நடவடிக்கைகளில், பாகிஸ்தான் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டதாக நம் படைகள் கூறின. அதே நேரத்தில், இந்திய விமானப் படையின் ஆறு போர் விமானங்களை வீழ்த்தியதாக, பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இதை மத்திய அரசும், நம் படைகளும் மறுத்தன.இந்நிலையில், ஆசிய நாடான சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, நம் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் சென்றுள்ளார். அங்கு, தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:ஆறு விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பது முக்கியமல்ல. ஆனால், எப்படி வீழ்த்தப்பட்டன? நம் வியூகங்களில் என்ன தவறு நடந்தது; அதை சரி செய்வதற்கான வழிகள் என்ன? எவ்வாறு இந்த தவறு சரி செய்யப்பட்டது என்பதே முக்கியம்.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதப் போரை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், அவ்வாறு அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான சூழ்நிலையே உருவாகவில்லை.சீனா, பாகிஸ்தானின் நட்பு நாடு தான். ஆனால், இந்தியா - பாக்., மோதலின் போது, பாகிஸ்தானுக்கு சீனா நேரடியாக எந்த ஆதரவும் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.நம் போர் விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என மத்திய அரசும், ராணுவமும் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில், விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக முப்படை தலைமை தளபதி கூறியுள்ளார்; ஆனால், எண்ணிக்கையை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மத்திய அரசு மீது கார்கே குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:சிங்கப்பூரில், நம் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் அளித்த பேட்டியின் வாயிலாக, இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து இதுவரை மத்திய அரசு தெரிவித்த கருத்துகள், நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை பரப்பி உள்ளதாக கருதுகிறோம். தலைமை தளபதி தெரிவித்த கருத்துகள் மீது, சில முக்கிய கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது. எனவே, சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தங்கள் உயிரை பணயம் வைத்து, நம் விமானப்படை வீரர்கள் போரிட்டுள்ளனர். சில சேதங்கள் ஏற்பட்டாலும், நம் படைவீரர்கள் பத்திரமாக உள்ளனர் என்பதை அறிகிறோம். எனினும், நம் படையினரின் தயார்நிலை குறித்து, ஒருங்கிணைந்த சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்.இந்தியா -- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிலை பற்றியும் மத்திய அரசு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.