பெங்களூரில் 80 வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு எச்சரிக்கை
பெங்களூரு: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், கோடை காலத்தில் பெங்களூரில் 80 வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று, அறிவியல் கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், காவிரி தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால், கடந்தாண்டு பெங்களூரு நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.தண்ணீர் தேவைக்காக நிலத்தடி நீரை போர்வெல் அமைத்து எடுத்தனர். இந்நிலையில் பெங்களூரு நகரின் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு நடத்தினர்.இந்த ஆய்வின் முடிவில், பெங்களூரு நகருக்குள் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்கள் மற்றும், நகரின் 80 வார்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் 110 கிராமங்கள் மற்றும் 80 வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் வார்டுகளில் வசிக்கும் மக்கள் நிலத்தடி நீரை நம்பி இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஐந்தாவது கட்ட திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, தண்ணீர் இருப்பு நன்றாக உள்ளது. ஆழ்துளை கிணறு மற்றும் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டடங்களுக்கு உடனடியாக காவிரி நீர் இணைப்பு வழங்கப்படும்.ஒரு நகரத்தில் மட்டும் நிலத்தடி நீர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை. 80 வார்டுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விஞ்ஞானிகள் தீர்வுகளை பரிந்துரைத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.