சாலை விபத்தில் ஒருவர் பலி தப்பி ஓடிய கார் ஓட்டுநர் கைது
கிருஷ்ணா நகர்: சாலை விபத்தில் சிக்கியதால் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கடந்த 2ம் தேதி போலீசாருக்கு லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில் இறந்தவர், கிருஷ்ணா நகரை சேர்ந்த ராஜேந்திர குப்தா, 35, என்பது தெரிய வந்தது. விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த பல்வேறு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஆக்ராவை சேர்ந்த ஹர்ஷித் மேத்தா, 24, என்பவரை அடையாளம் கண்டு, விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். விசாரணைக்கு ஆஜரான ஹர்ஷித் மேத்தா, விபத்து ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.