உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் சிக்கிய போதை பொருளின் மதிப்பு 75 கோடி! : தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 2 பெண்கள் கைது

பெங்களூரில் சிக்கிய போதை பொருளின் மதிப்பு 75 கோடி! : தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 2 பெண்கள் கைது

கர்நாடகாவில், போதைப் பொருள் விற்பனை அதிகரித்து உள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.போதை பொருட்கள் கடத்துவதில் பல வெளிநாட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவில் சட்ட விரோதமாக வசிக்கும் சில வெளிநாட்டினர், போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கர்நாடகா வரலாற்றிலேயே அதிக மதிப்பிலான போதை பொருளை மங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

சிக்கிய 15 கிராம்

மங்களூரு கிழக்கு போலீசார், ஆறு மாதங்களுக்கு முன் போதை பொருள் விற்பனை செய்த ஹைதர் அலி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கிராம் எம்.எம்.டி.ஏ.,வை பறிமுதல் செய்தனர்.இவரிடம் மங்களூரு சி.சி.பி., -- ஏ.சி.பி., மனோஜ் குமார் தலைமையில் விசாரணை நடந்தது. இதில், பெங்களூரில் வசித்து வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவர் பற்றி தகவல் கிடைத்தது.இதன்படி, பீட்டரை குறி வைத்த போலீசார், கடந்த சில மாதங்களுக்கு முன் அவரை கையும், களவுமாக பிடித்தனர். 6 கிலோ எம்.எம்.டி.ஏ.,வை பறிமுதல் செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிந்தது.அவர்களை சில மாதங்களாக கண்காணித்து வந்தனர். அவர்கள் இருவரும் டில்லியில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலமாக எம்.எம்.டி.ஏ.,வை கடத்தி வருவது தெரிந்தது.

விமான நிலையம்

இந்நிலையில், டில்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு போதை பொருட்களை அவர்கள் கடத்தி வருவதாக கடந்த 13ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, சி.சி.பி., போலீசார், பெங்களூரு விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இதன்படி, மறுநாள் 14ம் தேதி, அந்த இரு பெண்களும் வந்தனர். போலீசார், அவர்களை தீவிரமாக கண்காணித்தனர். அவர்களை சந்திக்க வேறு யாராவது வருகின்றனரா என்பதை கண்டுபிடிக்க ரகசியமாக பின்தொடர்ந்தனர். இந்த பணி, ஐந்து மணி நேரம் நீடித்தது.ஆனால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய பின், அவர்களை யாரும் சந்திக்கவில்லை. அவர்களை பின்தொடர்ந்து சென்ற போலீசார், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நீலாத் நகரில், இருவரையும் கைது செய்தனர். இரண்டு பெண்களும், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பாம்பா பான்ட்டா, 31, அபிகேல் அடோனிஸ், 30, என்பது தெரியவந்தது.இவர்களிடம் இருந்து 75 கோடி ரூபாய் மதிப்புள்ள 37.87 கிலோ எம்.எம்.டி.ஏ., போதை பொருட்கள், நான்கு மொபைல் போன்கள், இரண்டு ட்ராலி பேக்குகள், 18,460 ரூபாய், இரு பாஸ்போர்ட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகள் உதவி?

இவர்கள் மாதம்தோறும் 50 முதல் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள, 100 கிலோ அளவிலான எம்.எம்.டி.ஏ.,வை பெங்களூருக்கு விமானம் மூலம் கடத்தி வந்துள்ளனர்.இவர்கள் போதை பொருட்களை கடத்தி வருவதற்கு, டில்லி, பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் உதவி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து, மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கூறியதாவது:கர்நாடகா வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் இருவரும், கடந்த ஆறு மாதங்களில் டில்லிக்கும், பெங்களூருக்கும் இடையே 59 முறை விமானத்தில் பயணம் செய்து உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதை பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். போதை பொருட்களை நெலமங்களா, ஹொஸ்கோட், கே.ஆர்.புரம் ஆகிய இடங்களில் உள்ளவர்களிடம் விற்று உள்ளனர்.இந்த பணத்தை வைத்து, ஆடம்பரமான முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த வழக்கை என்.சி.பி., போலீசாருடன் இணைந்து விசாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை