உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் டிரம்ஸ் இசை கலைஞர் சனே டக்காய்ஷி

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் டிரம்ஸ் இசை கலைஞர் சனே டக்காய்ஷி

டோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக, 64 வயதான சனே டக்காய்ஷி தேர்வாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இவர், பிரபலமான டிரம்ஸ் இசைக்கலைஞர். கிழக்காசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி, பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் நெருக்கடியை சந்தித்ததை தொடர்ந்து, பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவரே ஜப்பானின் அடுத்த பிரதமராக பதவியேற்பார். பிரதமர் பதவிக்கு, முன்னாள் உள்துறை அமைச்சர் சனே டக்காய்ஷியும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமியும் போட்டியிட்டனர். சனே டக்காய்ஷி, நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுவாரா அல்லது போருக்கு பிந்தைய ஜப்பானின் மிக இளம் வயது பிரதமராக, சீர்திருத்தவாதியான ஷின்ஜிரோ கொய்சுமி பதவியேற்பாரா என கடும் எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியில், கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட தேர்தலில், டக்காய்ஷிக்கு 185 ஓட்டுகளும்; கொய்சுமிக்கு 156 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் சனே டக்காய்சி, ஜப்பானின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. இம்மாதம், 15ல் பார்லிமென்டில் நடக்கும் இறுதிக்கட்ட ஓட்டெடுப்பில் டக்காய்ஷி பிரதமராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லிபரல் ஜனநாயக கட்சி, பார்லிமென்டில் ஏற்கனவே பெரும்பான்மையை இழந்ததால், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும். ஜப்பானின் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் உட்பட முக்கிய பொறுப்புகளை வகித்த சனே டக்காய்ஷி, மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளராவார். கல்லுாரி காலத்தில் இசைக்குழுவில் டிரம்ஸ் வாசிப்பவராகவும் இருந்தார். பார்லிமென்டில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாதது, ஊழல் மோசடிகளால் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் உள்ள பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது, பணவீக்கம், விலைவாசி உயர்வு என, பிரதமராக பதவியேற்கும் டக்காய்ஷிக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை