அம்ரோஹா; உத்தர பிரதேசத்தில், சாலை என நினைத்து, குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.உ.பி.,யின் அம்ரோஹா மாவட்டம், பிம்புர் ரயில்வே கேட்டை, கடந்த 7ம் தேதி அதிகாலை, சொகுசு கார் ஒன்று கடந்தது. காரை ஆண் ஒருவர் ஓட்டி வந்தார். அருகில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். மேலும் சிலர் அந்த காரில் இருந்தனர். அவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அதிக வேகம்
ரயில்வே கேட்டை கடந்த கார், சாலையில் ஏறுவதற்கு பதிலாக ரயில் தண்டவாளத்திலேயே 50 மீட்டர் பயணித்தது. அதிக வேகம் காரணமாக, கார் வழியில் நின்றது. தண்டவாளத்தில் கார் நிற்பதை பார்த்து பதறிப்போன ரயில்வே ஊழியர்கள், உடனடியாக ஓடிச்சென்று காரில் இருந்தவர்களை எச்சரித்தனர். காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருப்பது தெரிந்தது.அப்போது தான் கார் தண்டவாளத்தில் நிற்பதை டிரைவர் உணர்ந்தார். காரில் இருந்தவர்கள் பதறியடித்து இறங்கி ஓடினர். ரயில் தண்டவாளத்தில் கார் சிக்கிக் கொண்டது. உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் வழியில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் போராடி காரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். 35 நிமிடங்களுக்கு பின் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. வழக்குப்பதிவு
ரயில் தண்டவாளத்தில் கார் நிற்பதை சரியான நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் பார்த்ததால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காரை ஓட்டி வந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.