உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மனைவிக்கு ஈ.டி., அனுப்பிய சம்மனுக்கு தடை! முடா வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதல்வர் மனைவிக்கு ஈ.டி., அனுப்பிய சம்மனுக்கு தடை! முடா வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மைசூரு புறநகர், கெசரே கிராமத்தில் 3.16 ஏக்கர் நிலத்தை, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, அவரது சகோதரர் மல்லிகார்ஜுன் சீதனமாக வழங்கியிருந்தார். இந்த நிலத்தை லே அவுட் அமைப்பதற்காக, 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்தியது.பொதுவாக எந்த பகுதியில், நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதே பகுதியில் அல்லது அதற்கு சமமான வேறு பகுதியில் மாற்று மனை வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் பார்வதிக்கு, மைசூரின் பிரபலமான விஜயநகர் லே அவுட்டில் 14 வீட்டு மனைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, மைசூரு லோக் ஆயுக்தாவில் புகார் அளித்திருந்தார்.சித்தராமையா, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவி பெயரில் மனை பெற்றுள்ளதாக, புகாரில் கூறியிருந்தார். லோக் ஆயுக்தாவும் விசாரணை நடத்திவருகிறது. ஏற்கனவே முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட பலரிடம் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினர்.இதற்கிடையே, இந்த விவகாரத்தில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்க துறையில், சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர் புகார் அளித்திருந்தார். அமலாக்க துறையும் விசாரணையில் ஈடுபட்டது.இதுவரை முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன் உட்பட, பலரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது. முதல்வருக்கும், அவரது மனைவிக்கும் எந்த நேரத்திலும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க கூடும் என, கூறப்பட்டது.இந்நிலையில், பார்வதிக்கும், நகர வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி சுரேஷுக்கும் அமலாக்கத் துறை, ஜனவரி 9ம் தேதி, முதல் சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டது. அதன்பின் ஜனவரி 24ம் தேதி மற்றொரு சம்மன் அனுப்பியது.முடா மனைகள் தொடர்பான முக்கிய கோப்புகளை இரவோடு, இரவாக விமானத்தில் மைசூரில் இருந்து, பெங்களூருக்கு கொண்டு வந்து திருத்தம் செய்ததாக, அமைச்சர் பைரதி சுரேஷ் மீது, குற்றச்சாட்டு உள்ளது. முடா, நகர வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.இதனால், பார்வதியை நேற்றும் அமைச்சர் பைரதி சுரேஷை இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.அமலாக்க துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க கோரி, பார்வதியும், பைரதி சுரேஷும் உயர் நீதிமன்ற தார்வாட் கிளையில் தனித்தனியாக மனு தாக்கல்செய்துள்ளனர். இதை அவசர மனுவாக விசாரிக்கும்படி, அவர்களின் தரப்பு வக்கீல்கள் நேற்று காலை வேண்டுகோள் விடுத்தனர். மாலை விசாரிப்பதாக நீதிமன்றம் கூறியது. இதன்படி நேற்று மாலை, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, பார்வதிக்கும், பைரதி சுரேஷுக்கும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு, பிப்ரவரி 10 வரை இடைக்கால தடை விதித்தார். விசாரணையை அன்றைக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Tetra
ஜன 28, 2025 17:04

ரொம்ப சந்தோஷம் எஜமான் நீதியை காட்டிடீங்க. பாவம் கர்நாடக முதலமைச்சர். இ டி ரொம்ப படுத்துறாங்க. ஆனா எஜமான் விசாரணைக்கு வரச்சொன்னா தப்புங்களா?


M S RAGHUNATHAN
ஜன 28, 2025 11:13

ஒரு புகாரை விசாரிக்க தடை என்றால் இனி எவரும் புகார் தரக் கூடாது என்று நீதி மன்றம் நினைக்கிறதா? இந்த அளவு கோல் சாமானிய மக்களுக்கு பொருந்துமா? இந்த புகாரில் உண்மை இல்லை என்றால், அமலாக்க துறை மற்றும் புகார் கொடுத்தவர்கள் மேல் நீதி மன்றம் தானாகவே முன்வந்து உரிய தண்டனை கொடுக்கட்டும். குற்றம் சாட்டப் பட்டவர் மீது விசாரணைக்கு தடை விதிப்பது நேர்மையான நீதி அல்ல. .அதிகார வர்கத்திற்கு நீதி மன்றம் அடி பணிவதேன்.


M S RAGHUNATHAN
ஜன 28, 2025 11:07

விசாரணைக்குத்தானே ஓலை அனுப்பி இருக்கிறார்கள். விசாரணையில் கலந்து கொண்டு பதில் சொல்ல வேண்டியதுதானே. எதற்கு நீதி மன்றம் தடை விதிக்க வேண்டும் ? அமலாக்கத் துறை எழுப்பும் வினாக்களுக்கு உரிய பதில் அளித்தால் விஷயம் முடிந்து விடும். தாமதத்திற்கு காரணம் நீதி மன்றங்கள் தான்.


seshadri
ஜன 28, 2025 07:05

நமது நீதித்துறை இப்போது வெகுவாக மாறிவிட்டது. முன்னர் நிரபராதி யாரும் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்று இருந்தது. ஆனால் இப்போது குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்பட்டு விட கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளது. அதுவும் பணம் பதவி இருந்தால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட்டு விட கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளது. அதனாலேயே இவர்களுக்கு எல்லாம் ஜாமீன் மற்றும் இவர்கள் மீது உள்ள வழக்குகளுக்கு தடை எல்லாம் கொடுக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை