உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.100 லஞ்சம் வாங்கியதாக வழக்கு: 39 ஆண்டுக்கு பின் முதியவர் விடுதலை

ரூ.100 லஞ்சம் வாங்கியதாக வழக்கு: 39 ஆண்டுக்கு பின் முதியவர் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிலாஸ்பூர்: நிலுவைத் தொகை வழங்க 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் இருந்து, மத்திய பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் முன்னாள் உதவியாளரை, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் 39 ஆண்டுகளுக்கு பின் விடுவித்து உள்ளது. கடந்த 1986ல் மத்திய பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் காசாளராக ஜகேஷ்வர் பிரசாத் அவாதியா பணியாற்றினார். நிலுவைத் தொகை வழங்குவதற்காக அவர் தன்னிடம் 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அசோக் குமார் வர்மா என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். அப்போதைய மத்திய பிரதேசத்தில் இருந்த ராய்ப்பூரில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, 2000ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சத்தீஸ்கரில் அமைந்துள்ள ராய்ப்பூர் விசாரணை நீதிமன்றம், 2004ல் ஜகேஷ்வருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் ஜகேஷ்வர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜகேஷ்வர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக அரசு தரப்பில் நிரூபிக்க தவறியதை அடுத்து, அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்; விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார். தற்போது 83 வயதான ஜகேஷ்வர், கடந்த 39 ஆண்டுகளாக போராடி, இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள அவர், ''தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்,'' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி