தண்டவாளத்தில் குட்டியை ஈன்ற யானை; இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்
ஹசாரிபாக் : ஜார்க்கண்டில் பிரசவ வலியால் துடித்த யானை தண்டவாளம் அருகே குட்டியை ஈன்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற சரக்கு ரயில் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதியை உடைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, நாடு முழுதும் அனுப்பி வைக்கப்படுகிறது.நிலக்கரி எடுத்து செல்லும் சரக்கு ரயில்களுக்காக, அங்குள்ள பார்க்ககானா - ஹசரிபாக் இடையே இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் வன விலங்குகள் அடிக்கடி தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம். சமீபத்தில் இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளம் அருகே சென்ற யானை, பிரசவ வலி காரணமாக அங்கேயே படுத்துக் கொண்டது. அதிகாலை நேரத்தில் பிரசவ வலியால் யானை பிளிறியது. இதை கவனித்த வனத்துறை ஊழியர்கள், உடனே ரயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தண்டவாளத்தில் யானை படுத்திருந்தது குறித்து உஷார்படுத்தினர். இதையடுத்து, அந்த வழியாகச் சென்ற சரக்கு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கு பின் குட்டியை ஈன்ற யானை, வனப்பகுதிக்குள் சாவகாசமாக நடந்து சென்றது. யானை சென்றதை அடுத்து, ரயில் புறப்பட்டு சென்றது.இது தொடர்பான வீடியோவை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், வனத் துறையினரை பாராட்டியுள்ளார்.