மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஓட்டுச்சாவடிகளில் வசதி
சண்டிகர்:பஞ்சாபின் லுாதியானா மேற்கு சட்டசபை தொகுதிக்கு நாளை நடக்கவிருக்கும், இடைத் தேர்தலில், வாக்காளர்களின் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்து, பின் வாங்கிச் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் தேர்தலை நடத்தும், தேர்தல் கமிஷன், சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், 'வரவிருக்கும் தேர்தல்களில், ஓட்டளிக்க வரும் வாக்காளர்கள் தங்கள் மொபைல் போன்களை கொடுத்து, பின் வாங்கிச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக, வரும் லுாதியானா மேற்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அந்த முறை அமலாகும்' என அறிவித்தது.அதன்படி, நாளை பஞ்சாபில் நடக்கவிருக்கும் லுாதியானா மேற்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், இந்த முறை அமலாக உள்ளது. இதற்காக, இந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள, 194 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர்களின் மொபைல் போன்களை வைக்க வசதியாக சணல் அல்லது துணியால் ஆன, சிறிய அளவிலான பை வழங்கப்படும்.அதில் மொபைல் போன்களை வைத்து, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடம் கொடுத்து விட்டு, ஓட்டளித்த பின் வாங்கிச் செல்லலாம்.இதுகுறித்து, பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி சிபின் சி கூறும் போது,''ஒட்டளிக்க வரும் வாக்காளர்களின் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருந்து திரும்ப ஒப்படைக்கும் முறை, ஓட்டளிப்பதை எளிமையாக மாற்றும். அதே நேரத்தில், ஓட்டுப்பதிவுகளை பாதுகாப்பானதாகவும் ஆக்கும்,'' என்றார்.லுாதியானா மேற்கு சட்டசபை தொகுதியின், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த குர்பிரீத் பஸ்சி கோஜி, கடந்த ஜனவரியில் இறந்ததை அடுத்து காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு தான், நாளை இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு பதிவான ஓட்டுகள், 23ம் தேதி எண்ணப்படும்.