உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானா பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்

தெலுங்கானா பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்

தெலுங்கானாவில், மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ., உள்ளது. சமீப காலமாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், 54, மற்றும் அக்கட்சியின் லோக்சபா எம்.பி., எடெலா ராஜேந்தர், 61, இடையே கோஷ்டி மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், கரிம்நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பண்டி சஞ்சய் குமாருக்கு, மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

திடீர் திருப்பம்

ஆனால், அந்த தேர்தலில் முதல்வர் ரேவந்த் ரெட்டி எம்.பி.,யாக பொறுப்பு வகித்த மல்கஜ்கிரி தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்ற எடெலா ராஜேந்தருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. தன் அமைச்சர் பதவியை பண்டி சஞ்சய் குமார் தட்டி பறித்து விட்டதாக எடெலா ராஜேந்தர் நினைக்கிறார். மேலும், கட்சி மேலிடத்தின் ஆதரவு அவருக்குத் தான் இருக்கிறது என்றும் அவர் கருதுகிறார். இதை அவர், பல முறை ஆதரவாளர்களிடமும் சொல்லி இருக்கிறார். தெலுங்கானா பா.ஜ., தலைவராக இருந்த பண்டி சஞ்சய் குமார், மத்திய இணை அமைச்சராகி விட்டதால், தலைவர் பதவி கிடைக்கும் என, எடெலா ராஜேந்தர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் திடீர் திருப்பமாக, கட்சியின் புதிய மாநில தலைவராக என்.ராமச்சந்திரா ராவ் நியமிக்கப்பட்டார். தனக்கு தலைவர் பதவி கிடைக்கக் கூடாது என, பண்டி சஞ்சய் குமார் சதி செய்து விட்டதாக எடெலா ராஜேந்தர் கருதினார். இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலில் தன் ஆதரவாளர்களுக்கு சீட் மறுக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டி வருகிறார். சமீபத்தில், மல்கஜ்கிரி லோக்சபா தொகுதியின் கீழ் வரும் ஹுசுராபாத் சட்டசபை தொகுதியில், சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் பங்கேற்றார். இதற்காக தொகுதி முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், அத்தொகுதியின் எம்.பி.,யான எடெலா ராஜேந்தரின் புகைப்படம் இல்லை. இதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கலக்கம்

ஆதரவாளர்களிடையே சமீபத்தில் பேசிய எடெலா ராஜேந்தர், பண்டி சஞ்சய் குமாரின் பெயரை குறிப்பிடாமல், அவரை மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார். மேலும், அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாரத் ராஷ்டிர சமிதியில் இருந்த எடெலா ராஜேந்தர், நிதி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார். அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவுடனான மோதலுக்கு பின், அவர் பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பண்டி சஞ்சய் குமாருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். தெலுங்கானாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பண்டி சஞ்சய் குமார் - எடெலா ராஜேந்தர் இடையேயான வெளிப்படையான கோஷ்டி மோதலால், அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர். கட்சி மேலிடம் விரைவில் தலையிட்டு பிரச்னையை சுமுகமாக முடித்து வைக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதில், டில்லி மேலிட தலைவர்கள் என்ன செய்யப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை