குமாரசாமி மீது பொய் புகார்? ஆதாரம் தராத தொழிலதிபர்!
அம்ருதஹள்ளி: மத்திய அமைச்சர் குமாரசாமி, 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாக, தொழில் அதிபர் விஜய் டாடா பொய் புகார் அளித்தாரா என்று, சந்தேகம் எழுந்து உள்ளது. இதுவரை தன்னை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களை போலீசாரிடம் அவர் வழங்கவில்லை.பெங்களூரை சேர்ந்தவர் விஜய் டாடா. தொழில் அதிபரான இவர் கட்டுமான நிறுவனம் நடத்துகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ம.ஜ.த., கட்சியில் இருந்தார். கடந்த 3ம் தேதி அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில், விஜய் டாடா அளித்த புகாரில், 'சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.தேர்தலுக்கு செலவு செய்ய 50 கோடி ரூபாய் தர வேண்டும் என்று, மத்திய அமைச்சர் குமாரசாமி, ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.சி., ரமேஷ் கவுடா ஆகியோர் என்னிடம் கேட்டனர். பணம் தர மறுத்ததால் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர்' என்று கூறி இருந்தார்.புகாரின்படி குமாரசாமி, ரமேஷ் கவுடா மீது வழக்குப் பதிவானது. 'விஜய் டாடா யார் என்றே எனக்கு தெரியாது. அவரிடம் பேசவே இல்லை' என்று குமாரசாமி கூறி இருந்தார். குமாரசாமி என்னிடம் பேசியதற்கான ஆதாரங்களை, போலீசிடம் தாக்கல் செய்வேன் என்று, விஜய் டாடா கூறி இருந்தார். ஆனால் வழக்கு தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போதும், இதுவரையிலும் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.இதனால் அவர் பொய் புகார் அளித்தாரா என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.'ஆவணங்கள் வழங்கினால் தான், அடுத்தகட்ட விசாரணை நடத்த முடியும்' என்று, அம்ருதஹள்ளி போலீசாரும் கூறி உள்ளனர்.