உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவிற்கு எதிராக பொய்ப் பிரசாரம்: விசா குறித்த கனடா குற்றச்சாட்டிற்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

இந்தியாவிற்கு எதிராக பொய்ப் பிரசாரம்: விசா குறித்த கனடா குற்றச்சாட்டிற்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விசா மூலம் கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது என்ற அந்நாட்டு ஊடகங்களின் குற்றச்சாட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இதனை வைத்து இந்தியாவிற்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறியுள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூனில் கொல்லப்பட்டான். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதையடுத்து இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மீது கனடா பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதனை இந்தியா நிராகரித்து விட்டது.இந்நிலையில், கனடா மீடியாக்களில், ' கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இந்தியா அரசு விசா வழங்க மறுக்கிறது. இதற்கு இந்தியாவின் பிராந்திய ஒற்றுமைக்கு எதிரான பிரசாரத்திற்கு ஆதரவு அளிப்பதை காரணமாக கூறுகிறது. இதன் மூலம் விசா வழங்கும் நடவடிக்கையை ஒரு கருவியாக பயன்படுத்தி, கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது ' என செய்திகள் வெளியாகின.இதனை நிராகரித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: கனடா மீடியாக்களின் செய்தியை பார்த்து வருகிறோம். இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கனடா ஊடகங்கள் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். விசா வழங்குவது என்பது, நமது இறையாண்மைக்கு உட்பட்ட செயல். பிராந்திய ஒற்றுமைக்கு எதிராக இருப்பவர்களுக்கு விசா வழங்காமல் நிராகரிப்பது நமக்கான உரிமை. கனடா மீடியாக்களில் நாம் பார்க்கும் கருத்து, இந்தியாவின் இறையாண்மை விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டிற்கு ஒப்பானதாகும். கடந்த வாரம் கனடாவில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை பார்த்து உள்ளோம். 3 இந்திய மாணவர்கள் வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்டு உள்ளனர். கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் தாக்கப்படுவது துயரமான சம்பவம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் ஒட்டாவா நகரில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் டொரன்டோ, வான்கூவர் நகரங்களில் உள்ள தூதரக அலுவலகங்கள் தேவையான உதவிகளைச் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி