திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி விவசாயிகள் குடும்பத்தினர் பாதயாத்திரை
சாம்ராஜ்நகர்: திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், மாண்டியா விவசாயிகள் பிரசித்த பெற்ற மலை மஹாதேஸ்வரா மலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர்.விவசாயிகளின் விளைச்சலுக்கு, நியாயமான விலை கிடைப்பது இல்லை என்ற வருத்தம் நீண்ட காலமாக உள்ளது. போட்ட முதலீடும் கிடைக்காமல் நஷ்டம் அடைகின்றனர்.இதனால் விவசாயிகளின் பிள்ளைகளை திருமணம் செய்து கொள்ள, இளம்பெண்கள் முன்வருவதில்லை. 40 வயதை கடந்த விவசாயிகளும் அவர்களின் குடும்பத்தினரும் திருமணம் ஆகாமல், நாட்களை கடத்துகின்றனர்.இதே காரணத்தால், மன அழுத்தத்துக்கு ஆளாகி, பலரும் தற்கொலை செய்து கொண்ட உதாரணங்களும் உள்ளன. இது சமூக பிரச்னையாக மாறியுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும்படி, அரசிடமும் விவசாய சங்க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசும் கூட விவசாயிகளை திருமணம் செய்ய முன் வரும் பெண்களுக்கு, ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தது. ஆனால் பயன் இல்லை.தங்களுக்கு பெண் கிடைத்து, திருமணமாக வேண்டும் என, விவசாயிகள் கடவுளை நாடுகின்றனர். கோவில்களுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இதற்கு முன்பு சாம்ராஜ்நகரின் விவசாய இளைஞர்கள், ஹனுாரில் உள்ள மலை மஹாதேஸ்வரா மலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர்.தற்போது மாண்டியாவின், அவ்வேரஹள்ளி கிராமத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட விவசாயிகள், மலை மஹாதேஸ்வரா மலை கோவிலுக்கு, நேற்று பாதயாத்திரை புறப்பட்டனர்.