உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோ கோ போட்டிகளில் சாதித்த விவசாயி மகள், ஆட்டோ ஓட்டுனர் மகன்

கோ கோ போட்டிகளில் சாதித்த விவசாயி மகள், ஆட்டோ ஓட்டுனர் மகன்

சமீபத்தில் நடந்து முடிந்த, 'கோ கோ' சர்வதேச போட்டியில், ஆண்கள், பெண்கள் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதில் கர்நாடகாவை சேர்ந்த இருவர், மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.முதன் முறையாக சர்வதேச கோ கோ உலக கோப்பை போட்டி, புதுடில்லியில் கடந்த 19ல் நடந்து முடிந்தது. இந்தியா சார்பில் ஆண்கள், பெண்கள் இரு அணியும் இறுதி போட்டியில் எதிரணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றன. இதில், பெண்கள் அணியில் கர்நாடகா மாநிலத்தின் மைசூரை சேர்ந்த சைத்ரா இடம் பெற்றிருந்திருந்தார்.சைத்ரா கூறியதாவது:கோ கோ உலக கோப்பையில் விளையாடுவேன் என்று கனவு கண்டதில்லை. ஆனால், இந்திய அணி சார்பில் சர்வதேச போட்டியில் விளையாட வேண்டும் என்ற மன உறுதி இருந்தது. கோப்பையை கைப்பற்றிய அணியில் நான் இருந்தது மகிழ்ச்சி அளிக்கறது. அத்துடன், இறுதி போட்டியில் சிறந்த வீரர் என்ற விருது பெற்றதை வாழ்நாளில் மறக்க மாட்டேன்.கிரிக்கெட் உட்பட மற்ற விளையாட்டுகளில் பிரபலமானவர்களுடன் மக்கள், 'செல்பி' எடுத்து கொண்டதை பார்த்திருக்கிறேன். ஆனால், வெற்றி பெற்ற என்னுடனும் 'செல்பி' எடுக்க பலர் கேட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து விளையாடி, எனது கிராமத்திற்கும், மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.சைத்ராவின் பெற்றோர் பசவண்ணா - நாகரத்னா கூறுகையில், 'எங்கள் மகள், 8 வயதில் இருந்தே விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை நாங்கள் கேட்கவில்லை. அவளுக்கு காலணி வாங்கி கொடுக்கவும் எங்களிடம் பொருளாதார வசதி இல்லை. தொடர்ந்து வெறும் காலில் விளையாடியதால், அவளின் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டது.'இரவு முழுதும் அதற்கு மருந்து தடவி விட்டோம். இதை எங்கள் மகள் சவாலாக ஏற்று விளையாடினாள். இந்த சாதனை மூலம் பதில் சொல்லி விட்டாள். எங்கள் மகள் விருது பெற்றதால், கிராமமே குதுாகலம் அடைந்துள்ளது' என்றனர்.பயிற்சியாளர் மஞ்சுநாத் கூறும்போது, ''இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினர். ஆனால், அரை இறுதி மற்றும் இறுதி சுற்றில் சைத்ரா சிறப்பாக விளையாடினார். இது, விளையாட்டின் மீது அவர் வைத்திருந்த அர்ப்பணிப்பை காட்டுகிறது,'' என்றார்.

ஆட்டோ ஓட்டுனர்

மாண்டியா மாவட்டம், மடூரின் டி.மல்லிகெரே கிராமத்தை சேர்ந்தவர் கபானி கவுடா - ரேகாவதி தம்பதி. கபானி கவுடா, ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர்களின் மகன் கவுதம், தற்போது பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட் தபால் அலுவலகத்தில், தபால்காரராக பணியாற்றி வருகிறார்.கோ கோ இந்திய அணியின் ஆண்கள் பிரிவில் கவுதம் விளையாடி, கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.அவரின் பெற்றோர் கூறுகையில், 'எங்கள் மகன் கவுதம், பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ராம்மந்திர் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும்போது துவங்கி, 16 ஆண்டுகளாக கோ கோ விளையாடி வருகிறார். இவரின் ஈடுபாட்டை அறிந்து, விஜநகரில் உள்ள, 'யங் பயோனியர் ஸ்போர்ட்ஸ் கிளப்'பில் சேர்த்து விட்டேன். அங்கு பயிற்சியாளர் குமார், இவருக்கு பயிற்சி அளித்தார்' என்றனர்.கவுதம் கூறும்போது, ''மஹாராஷ்டிரா மாநிலம், கோலாபூரில் தேசிய அளவிலான சீனியர் கோ கோ போட்டியில் பங்கேற்றது மறக்க முடியாத நிகழ்வு. இப்போட்டியில் எங்கள் அணி மூன்றாவது பரிசு பெற்றது. இருப்பினும், புதுடில்லியில் நடந்த உலக கோப்பை 2025ல் வெற்றி பெற்றதன் மூலம் சாதனை படைத்தது திருப்தி அளிக்கிறது. இந்த வெற்றியை என் மாநிலத்துக்கும், மாவட்டத்துக்கும் அர்ப்பணிக்கிறேன்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி