உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பரூக் அப்துல்லா கார் மீது துப்பாக்கிச் சூடு

 பரூக் அப்துல்லா கார் மீது துப்பாக்கிச் சூடு

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சென்ற காரை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி இருவரும் நேற்று ஜம்முவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன் பின் இருவரும், அங்கிருந்து காரில் புறப்பட்ட நிலையில், பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி, அடையாளம் தெரியாத நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரும் காயம் அடையவில்லை. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், உடனடியாக அந்த நபரை கையும் களவுமாக பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். முன்னாள் முதல்வர், தற்போதைய துணை முதல்வரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட நபர் மது போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !