மது விற்பனையை எதிர்த்தவரை அடித்து கொன்ற ஐவர் கைது
பாகல்கோட்: சட்டவிரோதமாக மது விற்பதை தட்டிக்கேட்டு தாக்குதலுக்கு ஆளானவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, தம்பதி உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.பாகல்கோட், பாதாமியின் கெரூர் கிராமத்தில் வசித்தவர் வெங்கட ரெட்டி சேஷப்பனவர், 40. இவரது வீட்டருகில் வசிக்கும் ஹனுமந்த் நீலர் என்பவர், தன் வீட்டிலேயே சட்டவிரோதமாக மது விற்றார். இவரிடம் பாக்கெட் மது வாங்கிக் குடிப்பவர்கள், காலி பாக்கெட்டுகளை வெங்கட ரெட்டி சேஷப்பனவர் வீட்டு முன் வீசிச் சென்றனர். இவரது வீட்டு முன் சிலர் குடிபோதையில் சண்டை போட்டனர்.தினமும் இதுபோன்ற தொல்லைகளை அனுபவித்த வெங்கட ரெட்டி, 'எங்கள் வீட்டருகில் மது விற்காதீர்கள்' என, பல முறை கேட்டுக்கொண்டார். ஆனால் ஹனுமந்த நீலர் பொருட்படுத்தவில்லை. இதனால், இரு தரப்பினருக்கும் தகராறு நடந்தது. கடந்த 21ம் தேதி, ஹனுமந்த நீலரும், அவரது குடும்பத்தினரும் வெங்கட ரெட்டியுடன் தகராறு செய்து, அவரை கட்டையால் அடித்தும், மின்சார ஷாக் கொடுத்தும் தாக்குதல் நடத்தினர்.இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார். வழக்குப் பதிவு செய்த கெரூர் போலீசார், ஹனுமந்த நீலர், அவரது மனைவி ஷைலா, பர்வதகவுடா, புட்டப்பா, சித்தப்பா நீலகவுட்ரா ஆகியோரை கைது செய்தனர்.