உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமேதி அருகே பயங்கர விபத்து ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஐவர் பலி

அமேதி அருகே பயங்கர விபத்து ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஐவர் பலி

அமேதி,:உ.பி.,யின் அமேதி அருகே, ஹரியானாவிலிருந்து பீஹாருக்கு உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், முன்னாள் சென்ற சரக்கு ஏற்றிச் சென்ற மினி லாரி மீது மோதியதில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த, ஐந்து பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பீஹார் மாநிலம் சமஸ்திபூர் என்ற பகுதியை சேர்ந்த அசோக் சர்மா என்பவர், ஹரியானா மாநிலத்தில் இறந்தார். அவர் உடலுடன் உறவினர்கள், சமஸ்திபூர் நோக்கி நேற்று அதிகாலை ஆம்புலன்ஸ் வாகனத்தில், பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே என்ற அதிவிரைவு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த, சரக்குகளை ஏற்றிச் சென்ற மினி வேன் மீது திடீரென மோதியது. இதில், சமஸ்திபூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் சர்மா, ரவி சர்மா, பூலா சர்மா மற்றும் இரு வாகனங்களின் ஓட்டுனர்களான சர்பராஸ், அபித் ஆகிய இருவர் உள்ளிட்ட ஐந்து பேரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த பயங்கர விபத்தில் படுகாயம் அடைந்த ஷாம்பு ராய் உள்ளிட்ட சிலர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, கூடுதல் எஸ்.பி., சைலேந்திர குமார் சிங் கூறும் போது,''விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம், ஹரியானாவிலிருந்து, பீஹாருக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே வழியே சென்று கொண்டிருந்த போது, விபத்துக்கு உள்ளானது,'' என்றார்.இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள, மாநில முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், 'அமேதி அருகே நேற்று காலையில் நிகழ்ந்த விபத்தில், ஐந்து பேர் இறந்தது குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை