மழம்புழா அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை
பாலக்காடு: 'பருவ மழை தீவிரமடைந்ததால், பாலக்காட்டிலுள்ள மலம்புழா அணையின் நீர்மட்டம், 370.6 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தண்ணீர் எந்நேரத்திலும் திறந்துவிடபடலாம்' என்று நீர்வள பாசனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மலம்புழா அணையை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த நீர் மட்டம், 377.5 அடி. தற்போது, 370.6 அடி தண்ணீர் உள்ளது. அணையிலிருந்து எந்நேரத்திலும் தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்று, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், கல்பாத்தி, மாங்கரை, தேனூர், பட்டாம்பி ஆகிய நதியோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிப்பவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அணையில் 370 அடிக்கு முதற்கட்ட எச்சரிக்கையும், 374 அடிக்கு தண்ணீர் உயர்வு ஏற்பட்டால், இரண்டாவது கட்டமாக எச்சரிக்கை விடுவதும் வழக்கமானது என்று நீர்வள பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.