லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி; வால்மீகி மகரிஷிக்கு சமர்ப்பணம்
பெங்களூரு; குடியரசு தினத்தை முன்னிட்டு, லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. இம்முறை கண்காட்சியில் ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷியின் வாழ்க்கை இடம் பெறுகிறது.இது குறித்து, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது:சுதந்திர தினம், குடியரசு தினத்தின் போது, தோட்டக்கலைத் துறை சார்பில், பெங்களூரில் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். அதே போன்று, இம்முறையும் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜனவரி 16 முதல் 26 வரை மலர் கண்காட்சி நடக்கும்.வேடுவ குலத்தின் முதல் படிப்பாளியாக கருதப்படும், ராமாயணம் என்ற பெரும் காவியத்தை எழுதிய வால்மீகி மகரிஷியின் வாழ்க்கை வரலாறு, இம்முறை கண்காட்சியில் பூக்களால் விவரிக்கப்படும். ராமாயண காவிய புத்தகத்தையும் பூக்களின் வடிவத்தில் பார்க்கலாம்.கண்காட்சிக்காக, ஏற்கனவே பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான பூக்கள் வளர்க்கப்பட்டன. இவை வரிசையாக அடுக்கப்படுகின்றன. புல் விரிப்பு அமைந்துள்ளது. பூங்காவின் அழகை மெருகேற்றுவதில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பெடோனியா, அர்கேஷியா, ரோஜா, லில்லி, சாமந்தி, செண்டுப்பூ, ரெட் ஹாட் போக்கர், போஷியா, டியூபிரஸ், அகபாந்தஸ், சைக்ளோமென், ஆர்க்கிட் உட்பட உள்நாடு, வெளி நாடுகளின் பல்வேறு வகையான பூக்கள், கண்காட்சியில் மக்களை கவரும்.லால்பாக் கண்ணாடி மாளிகையில், வால்மீகி மகரிஷியின் வாழ்க்கையை பூக்கள் வடிவத்தில் கொண்டு வரும் பணிகள் நடக்கின்றன. நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.