லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்கம் ஒரே இடத்தில் 30 லட்சம் பூக்கள் பார்க்க வாய்ப்பு
பெங்களூரு: குடியரசு தினத்தை முன்னிட்டு, லால்பாக் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சியை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கி வைத்தார்.பெங்களூரின் லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 10:00 மணியளவில் மலர் கண்காட்சியை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். துணை முதல்வர் சிவகுமார், தோட்டக்கலை அமைச்சர் மல்லிகார்ஜுன், போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி உட்பட பலர் உடன் இருந்தனர்.நேற்று துவங்கிய மலர் கண்காட்சி, ஜனவரி 27ம் தேதி வரை நடக்கவுள்ளது. 2.75 கோடி ரூபாய் செலவில், கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 30 லட்சம் பூக்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.குடியரசு தினத்தை முன்னிட்டு, நடக்கும் மலர் கண்காட்சி, மகரிஷி வால்மீகிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சிறார்களுக்கு ராமாயண காவியம் குறித்து, தெரியாத விஷயங்களை பூக்கள் மூலம் விவரித்துள்ளனர். வால்மீகியின் ஆசிரமம், அவர் தவம் செய்யும் காட்சி என, அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை பூக்களால் காண்பித்து உள்ளனர்.பெருமளவில் மக்கள் வருவதால், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். குடிநீர், கழிப்பறை என, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியை முன்னிட்டு, வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:லால்பாக் பூங்காவின் மலர் கண்காட்சிக்கு 8 முதல் 10 லட்சம் பேர் வரும் வாய்ப்புள்ளது. இதனால், வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.லால்பாக் தலைமை நுழைவு வாசலில் இருந்து நிமான்ஸ் சாலையின் இரண்டு ஓரங்கள்; கே.ஹெச்.சாலை, கே.ஹெச்.சதுக்கத்தில் இருந்து சாந்திநகர் சந்திப்பு வரை சாலையின் இரு பக்கமும்; லால்பாக் சாலை, சுப்பையா சாலையில் இருந்து, லால்பாக் நுழைவு வாசல் வரை; ஊர்வசி திரையரங்கு சந்திப்பில் இருந்து, வில்சன் கார்டன் 12வது கிராஸ் வரை; பி.எம்.டி.சி., சந்திப்பில் இருந்து, தபால் அலுவலக சாலையின் இரண்டு ஓரங்கள்; குரும்பிகல் சாலையின் இரண்டு ஓரங்களிலும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.லால்பாக் மேற்கு நுழைவு வாயிலில் இருந்து, ஆர்.வி.டீச்சர்ஸ் கல்லுாரி வரை; ஆர்.வி.டீச்சர்ஸ் கல்லுாரியில் இருந்து அசோக் பில்லர் வரை; அசோக் பில்லரில் இருந்து, சித்தாபுரா சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை, மரிகவுடா சாலை, அல் அமீன் கல்லுாரி வளாகத்தில் நிறுத்தலாம். நான்கு சக்கர வாகனங்களை கே.ஹெச்.சாலை, சாந்திநகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையம் அருகில் நிறுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.14,540 பேர்கண்காட்சியில் முதல் நாளான நேற்று 8,500 பெரியவர்கள், 6,510 சிறியவர்கள் என மொத்தம் 14,540 பேர் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் 5 லட்சம் ரூபாய் வசூல் ஆனது.