கைதாகும் முன்னாள் சி.எஸ்.கே., வீரர் ராபின் உத்தப்பா; பிடிவாரண்ட் பிறப்பிப்பு
பெங்களூரு: வருங்கால வைப்பு நிதி மோசடி வழக்கில் முன்னாள் சி.எஸ்.கே., வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் உத்தப்பா இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது, அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள அவர், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு, 'சென்சூரிஸ் லைப் ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடேட்' எனும் ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், உத்தப்பாவின் நிறுவனம் தரப்பில் தொகை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஊழியர்கள் பிஎப் பணத்தை வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், செலுத்தவேண்டிய ரூ.23 லட்சத்து 26 ஆயிரத்து 602 ரூபாயை செலுத்துமாறு பெங்களூரு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். ஆனால், உத்தப்பா நிறுவனம் இந்த உத்தரவை கண்டுகொள்ளவில்லை. எனவே, வரும் 27ம் தேதிக்குள் இந்தத் தொகையை செலுத்தாவிட்டால், உத்தப்பாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி ஆணையிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.