உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., சீட் எதிர்பார்க்கும் மாஜி ஐ.பி.எஸ்., அதிகாரி

பா.ஜ., சீட் எதிர்பார்க்கும் மாஜி ஐ.பி.எஸ்., அதிகாரி

பெங்களூரு: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பாஸ்கர் ராவ், பா.ஜ., சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகின்றன. பல கட்சிகள் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், பா.ஜ., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுமே ஒவ்வொரு தொகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.மைசூரு லோக்சபா தொகுதியில், காங்கிரசில் அரை டஜன் தலைவர்கள் சீட் எதிர்பார்க்கின்றனர். ஆனால், பா.ஜ.,வில் பிரதாப் சிம்ஹாவை தவிர, வேறு யாருடைய பெயரும் வெளியாகவில்லை. இந்நிலையில் பா.ஜ., மேலிடம் சீட் கொடுத்தால் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உட்பட, பல்வேறு பதவிகளை நிர்வகித்தவர் பாஸ்கர் ராவ். ஆம் ஆத்மியில் இருந்து, பா.ஜ.,வில் இணைந்த இவர், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் சாம்ராஜ்பேட் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அதன்பின் அவர் கட்சியை பலப்படுத்துவதில்ஈடுபட்டுள்ளார்.பல மாதங்களுக்கு முன்பே, குடகு, மைசூரு பகுதியில் பிராமண சமுதாய தலைவர்களை சந்தித்து, சமுதாயத்தை ஒருங்கிணைக்க முயற்சித்தார். சமீப நாட்களாக குடகு, மைசூரு பகுதிகளில் அதிகமாக நடமாடுகிறார். போலீஸ் அதிகாரியாக இவ்விரு மாவட்டங்களில், அவர் பணியாற்றி உள்ளார். எனவே இங்குள்ள மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்.இம்முறை லோக்சபா தொகுதியில், மைசூரு - குடகு தொகுதியில், பா.ஜ., சீட் எதிர்பார்க்கிறார். தன்னால் வெற்றி பெற முடியுமென நம்புகிறார்.இதுதொடர்பாக, பாஸ்கர் ராவ் கூறியதாவது:போலீஸ் அதிகாரியாக இருந்தபோது, மாநிலத்தின் பல இடங்களில் பணியற்றினேன். மைசூரு, குடகு பகுதியிலும் கூட, சிறப்பாக பணியாற்றினேன். யாருடைய ரத்தமும் மண்ணில் விழாமல், சட்டம் - ஒழுங்கை காப்பாற்றினேன். இது மக்களுக்கு தெரியும். கட்சி வாய்ப்பளித்தால், இந்த தொகுதியில் போட்டியிடுவேன். கட்சி மேலிட உத்தரவுப்படி நடந்து கொள்வேன்.நானும் சீட் எதிர்பார்க்கிறேன் என, பகிரங்கமாக கூறும் தகுதி எனக்குள்ளது. நான் மைசூருக்கு வருவது, எங்களின் சமுதாய நலனுக்காக. எங்கள் சமுதாயத்தின் முன்பாக, பல சவால்கள் உள்ளன. சமுதாயத்தினர் முக்கியமான பதவிகளை நிர்வகித்துள்ளனர். அனைத்து சமுதாயத்தினருக்கும், எங்கள் சமுதாயம் மீது கவுரவம் உள்ளது.அதிகாரம் இருந்தால் மட்டுமே, நாங்களும் முன்னே வர முடியும். அனைத்து தேர்தல்களிலும், சமுதாயத்தினர் தைரியத்துடன் போட்டியிட வேண்டும். ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு, நம்மிடம் உள்ள சக்தி, திறமையை வீணாக்க கூடாது. முயற்சியே செய்யாமல் இருந்தால், யுத்தத்துக்கு முன்பே தோற்றது போன்றாகும். எனவே லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி