மேலும் செய்திகள்
வெடித்து சிதறிய காரை ஓட்டியவர் புல்வாமா டாக்டர்
12-Nov-2025
புதுடில்லி: டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், தற்கொலைப் படையாக மாறிய டாக்டர் உமர் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக, அல் பலாஹ் பல்கலையின் முன்னாள் ஊழியர் சோயப் என்பவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். தலைநகர் டில்லியின் செங்கோட்டை பகுதியில், கடந்த 10ம் தேதி மாலை, கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில், 15 பேர் உயிரிழந்தனர். காரை ஓட்டியவர் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பதும், தற்கொலைப் படை தாக்குதலில் அவர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதே நாளில் காலையில், ஹரியானாவின் பரிதாபாதில், 3,000 கிலோ வெடி பொருட்களுடன், அங்கு செயல்படும் அல் பலாஹ் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்கள் முஸாம்மில் கனி, அவரது தோழி ஷாஹீன் சயீத் கைதான நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியது. விசாரணையில், உயிரிழந்த உமர் நபி கைதான டாக்டர் முஸாம்மிலின் நெருங்கிய கூட்டாளி என்பது தெரிய வந்தது. நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்கொலைப் படை பயங்கரவாதி உமர் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக, அல் பலாஹ் பல்கலையின் முன்னாள் ஊழியரான சோயப்பை என்.ஐ.ஏ., நேற்று கைது செய்தது. என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: பரிதாபாதின் தவுஜ் என்ற பகுதியைச் சேர்ந்த சோயப், டில்லி குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கும் முன் வரை, உமர் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், அவருக்கு போக்குவரத்து மற்றும் பிற உதவிகளை வழங்கி உள்ளார். இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அல் பலாஹ் பல்கலையின் முன்னாள் ஊழியரான சோயப், குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி தெரிந்திருந்தும் உமர் நபியை தன்னுடன் தங்க வைத்துள்ளார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
12-Nov-2025