டில்லியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து 11 பேர் பரிதாப பலி
முஸ்தபாபாத்: டில்லியில் கனமழை காரணமாக, நான்கு மாடி வீட்டு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 11 பேர் பலியாகினர். டில்லியில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை பெய்தது. நள்ளிரவு தாண்டியும் இடி மின்னலுடன் மழை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை, 2:50 மணிக்கு முஸ்தபாபாத் பகுதியில் உள்ள 'எல்' வடிவ கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. குடியிருப்பு கட்டடமான இதில், 20க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த கட்டடத்தால், அப்பகுதியே புகைமண்டலமானது. விரைந்தனர்
அருகில் இருந்த வீடுகளில் வசித்தோர் அலறியடித்தபடி வெளியே வந்து சாலையில் தஞ்சமடைந்தனர். உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் டில்லி தீயைணைப்பு படையினர் விரைந்தனர். மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் உடனடியாக வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் இருந்து இறந்த நிலையில் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கட்டட குவியல்களின் நடுவே படுகாயங்களுடன் தவித்த 14 பேரை மீட்ட மீட்புக் குழுவினர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், நான்கு பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்தது. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டடம் இடிந்து விழுந்த பகுதி மிகவும் நெரிசலான குறுகிய சாலை என்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள டில்லி முதல்வர் ரேகா குப்தா, படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். அலட்சியம்
இந்த விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என முஸ்தபாபாத் பா.ஜ., - எம்.எல்.ஏ., மோகன் சிங் பசிஷ்ட் குற்றஞ்சாட்டியுள்ளார். “அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிப்பதால் பேரழிவு ஏற்படும் என இரண்டு மாதங்களுக்கு முன்பே எச்சரித்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ''இதற்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, அவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த வாரம், மதுவிஹார் மற்றும் கரோல் பாக் பகுதியில் கட்டடங்களின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் முதியவர் மற்றும் சிறுவன் என இருவர் பலியான நிலையில், முஸ்தபாபாத் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.