தேசத்தை பாதுகாப்பதே இலக்கு; ராணுவம், போலீசாரை பாராட்டிய ராஜ்நாத் சிங்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராணுவம், போலீசாரும் வெவ்வேறு துறைகளை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான். நமது தேசத்தை பாதுகாப்பதே அவர்களது இலக்கு என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.காவலர் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீனப் படையினரால் வீரமரணம் அடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படையினரின் தியாகத்தை நினைவுபடுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும். காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு, டில்லியில் தேசிய காவலர் நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.பின்னர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நானே உள்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். காவல்துறையின் நடவடிக்கைகளை நெருக்கமாகக் கவனிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேலும், பாதுகாப்பு அமைச்சராக, ராணுவத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. தேச பாதுகாப்பு
ராணுவம், போலீசாரும் வெவ்வேறு துறைகளை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான். நமது தேசத்தை பாதுகாப்பதே அவர்களது இலக்கு.ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு உள் மற்றும் வெளிப்புறம் என இரண்டை அடிப்படையாக கொண்டுள்ளது. வெளிப்புற பாதுகாப்பிற்கு, ராணுவமும், கடலோர காவல்படையினரும் உள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பிற்காக, போலீசார் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். தூண்கள்
ராணுவம் நாட்டைப் பாதுகாக்கிறது; காவல்துறை சமூகத்தைப் பாதுகாக்கிறது. ராணுவம் புவியியல் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் அதே வேளையில், காவல்துறை சமூகத்தை அடிமட்ட மட்டத்தில் இருந்து பாதுகாக்கிறது. அது ராணுவமாக இருந்தாலும் சரி, காவல்துறையாக இருந்தாலும் சரி, அவர்கள் இருவரும் நாட்டின் பாதுகாப்பின் தூண்கள். எதிரி எல்லைகளுக்கு அப்பால் அல்லது நமக்குள் இருக்கலாம். ராணுவமும் காவல்துறையும் ஒரே மாதிரியாக செயல்பட்டு அவர்களை திறம்பட எதிர்கொள்கின்றனர். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.