தங்க, வைர நகைகள் ஆட்டை வேலைக்கார வாலிபர் கைது
புதுடில்லி:வேலை செய்த வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.தெற்கு டில்லியில் தனியாக வசித்த 92 வயது மூதாட்டி வீட்டில் கணேஷ் தத்,24, உதவியாளராக வேலை செய்தார். மகன் வெளிநாட்டில் வசிப்பதால் மூதாட்டிக்கு உதவியாக கணேஷை நியமித்து இருந்தனர். நேற்று முன் தினம், பீரோவை திறந்த மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்திருந்த பல நகைகளை காணவில்லை. இதுகுறித்து, லோதி காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வந்து ஆய்வு செய்தனர். பின், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். திருட்டு நடந்ததாக கூறப்பட்டும் நாளில் மூதாட்டி வீட்டுக்குள் வெளியாட்கள் யாருமே வந்து செல்லவில்லை.இதையடுத்து, கணேஷ் தத் மீது சந்தேகம் ஏற்பட்டது. முதலில் மறுத்த கணேஷ் கிடுக்கிப் பிடி விசாரணையில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.கிடோரணியில் உள்ள கணேஷ் தத் சகோதரி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கப் பதக்க சங்கிலி, பழங்கால தங்க நெக்லஸ், தங்க ஜிமிக்கிகள் மற்றும் மோதிரம், ஒரு வைர மோதிரம், இரண்டு வைர வளையல்கள் மற்றும் எட்டு வெள்ளி மற்றும் நான்கு தங்க நாணயங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கணேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.