உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வி.கே.பாண்டியன் மனைவியின் விருப்ப ஓய்வுக்கு அரசு ஒப்புதல்

வி.கே.பாண்டியன் மனைவியின் விருப்ப ஓய்வுக்கு அரசு ஒப்புதல்

புவனேஸ்வர்: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு முந்தைய பிஜு ஜனதா தள ஆட்சியில், அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக, தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியன் இருந்தார். கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்த பாண்டியன், 2023 அக்டோபரில், விருப்ப ஓய்வு பெற்றார். இதன்பின், பிஜு ஜனதா தளத்தில் முறைப்படி சேர்ந்த அவர், கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். இதை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ., கடுமையாக விமர்சித்தது. தொடர்ந்து, 2024ல் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,விடம் ஆட்சியை பிஜு ஜனதா தளம் பறிகொடுத்தது. இதற்கு வி.கே.பாண்டியன் தான் காரணம் என பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தீவிர அரசியலில் இருந்து அவர் விலகினார். இந்நிலையில், வி.கே.பாண்டியனின் மனைவியும், ஒடிசா மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன், விருப்ப ஓய்வு கேட்டு, விண்ணப்பித்திருந்தார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.கடந்த, 2000ம் ஆண்டு ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவர், நிதித் துறை சிறப்பு செயலராக இருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்ததாக அவர் குறிப்பிட்டுஇருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ