சாலைகளில் திரியும் பசுக்களை பராமரிக்க அரசு அழைப்பு
புதுடில்லி: சாலைகளில் திரியும் மாடுகளை பராமரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு டில்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது. கால்நடை மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியதாவது: டில்லி மாநகரில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. துறை ஆணையர் ஷூர்பீர் சிங், அதிகாரிகள், இஸ்கான் மற்றும் கோபால் கவ் சதன் போன்ற பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். டில்லி மாநகரில் திரியும் மாடுகளை பாதுகாப்பான மற்றும் சுத்தமான இடங்களில் தங்க வைத்து பராமரிப்பது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. பசுக்களை பாதுகாக்க பல்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டன. குமன்ஹேடா கிராமத்தில் தனியாருடன் இணைந்து புதிய கோசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடம் உரிமத்தின் அடிப்படையில் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகளையும் தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வ நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும். உரிம காலத்தை அரசு நிர்ணயிக்கும். அதன் செயல்பாட்டை பொறுத்து ஐந்து ஆண்டுகள் வரை உரிமம் நீட்டிக்கப்படும். இதற்கான எந்த நிதி உதவியும் அரசு வழங்காது. நிலத்தின் உரிமை அரசிடமே இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனம் அங்கு மாடுகளை பராமரிக்க மட்டுமே உரிமம் வழங்கப்படும். பசுக்கள் நம் நாட்டு கலாசாரம் மற்றும் நம்பிக்கையின் சின்னம். அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை. எனவே, பசுக்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் அரசை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.