9 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் ஐகோர்ட்டில் அரசு தகவல்
புதுடில்லி:திஹார் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டு சேர்ந்து பணம் பறித்த, ஒன்பது அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுவதாக, உயர் நீதிமன்றத்தில் டில்லி அரசு தெரிவித்துள்ளது. கடந்த, 2024ம் ஆண்டு பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மோஹித் குமார் கோயல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் இணைந்து பணம் கேட்டு அவரை மிரட்டினர். அதே ஆண்டில், செப்டம்பர் மாதம் ஜாமினில் வந்தவுடன் இதுகுறித்து, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். திஹார் சிறையில் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏப்ரல் 7ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில், திஹார் சிறையில் முறைகேடுகள் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க மே 2ம் தேதி சி.பி.ஐ.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், திஹார் சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில் முறைகேடு செய்த சிறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய, 11ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான டில்லி அரசு வழக்கறிஞர், 'திஹார் சிறையில் ஒன்பது அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது' என்றார். இந்த விவகாரத்தில், திஹார் மட்டுமின்றி ரோஹிணி, மண்டோலி உட்பட அனைத்து சிறைகளின் நிலை குறித்து டில்லி அரசு மற்றும் சி.பி.ஐ., தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய எட்டு வார அவகாசம் வழங்கி, விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்ததனர்.