50 உள்ளாட்சிகளை தரம் உயர்த்த படிப்படியாக நடவடிக்கை
பெலகாவி: 'உள்ளாட்சி அமைப்புகளை படிப்படியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ரஹீம்கான் ஆகியோர் கூறினர்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பா.ஜ., உறுப்பினர்கள் தினகர் கேசவ ஷெட்டி, விஜயேந்திரா, அஸ்வத் நாராயணா, சுனில்குமார், பைரதி பசவராஜ் ஆகியோர் பேசுகையில், 'உத்தர கன்னடா மாவட்டம், கோகர்ணாவில் பிரசித்தி பெற்ற மஹாபலேஸ்வரர் கோவில் உள்ளது. கடற்கரையும் அங்கு உள்ளதால் சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். அங்கு கூடுதல் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். கோகர்ணா கிராம பஞ்சாயத்தாக உள்ளது. அதை பட்டண பஞ்சாயத்து அல்லது நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்' என்றனர்.இதற்கு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ரஹீம்கான் ஆகியோர் அளித்த பதில்:கிராம பஞ்சாயத்துகளை பட்டண பஞ்சாயத்தாகவும், பட்டண பஞ்சாயத்துகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த கோரி அரசுக்கு 50க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் வந்துள்ளன. முதல்வர் சித்தராமையா மற்றும் நிதி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, முன்மொழிவுகளை நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள்தொகை 20,000க்கு மேல் இருந்தால் மட்டுமே, கிராம பஞ்சாயத்தை தரம் உயர்த்த முடியும்.உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகம், கோகர்ணாவை பட்டண பஞ்சாயத்தாக தரம் உயர்த்த வேண்டும் என்று முன்மொழிவு சமர்ப்பித்துள்ளனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோகர்ணாவின் மக்கள்தொகை 13,539. ஆனாலும் கோகர்ணாவை பட்டண பஞ்சாயத்தாக உயர்த்துவது குறித்து அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி சாதகமான முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர்கள் கூறினர்.