| ADDED : அக் 19, 2024 07:36 PM
புதுடில்லி: 20 லிட்டர் தண்ணீர் கேன்கள், சைக்கிள் மற்றும் நோட்டு புத்தகங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் அதிக விலை கொண்ட கைக்கடிகாரங்கள் மற்றும் ஷூக்களுக்கு ஜி.எஸ்.டி.,யை அதிகரிக்கவும் முடிவெடுத்துள்ளது.தற்போது ஜி.எஸ்.டி., 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி என நான்கு அடுக்குகளை கொண்டதாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதம் என்ற அதிக வரி கொண்ட பட்டியலில் உள்ளது. இதில், சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யை மாற்றி அமைப்பது குறித்து பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. இக்குழுவில் உ.பி., நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா, ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா மற்றும் கேரள நிதியமைச்சர் பாலகோபால் ஆகியோர் உள்ளனர். இந்தக்குழு முடிவின் படி, 20 லிட்டர் கொண்ட தண்ணீர் கேன்களுக்கான ஜி.எஸ்.டி.,யை 18 ல் இருந்து 5 சதவீதமாகவும்,ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான சைக்கள் மீதான ஜி.எஸ்.டி.,யை 12 ல் இருந்து 5 சதவீதமாகவும்நோட்டு புத்தகங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை 12 ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கவும் முடிவு செய்துள்ளது.அதேபோல் ரூ.15 ஆயிரத்திற்கு அதிக விலை கொண்ட ஷூக்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்திற்கு மேற்பட்ட விலை கொண்ட கைக்கடிகாரங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை 18 ல் இருந்து 28 ஆகவும் உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என அக்குழு கூறியுள்ளது.