குருகிராம் போலீசார் அதிரடி மேற்குவங்க மக்கள் அதிர்ச்சி
குருகிராம்:குருகிராம் நகரில் பணியாற்றும் பெரும்பாலான மேற்கு வங்கத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். 'எந்த நேரமும் தாங்களும், வங்கதேசத்தவர் என போலீசாரால் பிடித்து செல்லப்படும் வாய்ப்பு இருக்கிறது' என, அவர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியேற்ற சட்டப்படி, இந்தியர் தவிர்த்து, இந்தியாவில் வாழும் பிற நாட்டினர் கைது செய்யப்பட்டு, அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர், அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சமீப காலமாக இந்தியர் தவிர்த்து, பிற நாட்டினர் அனுமதியின்றி தங்கியிருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை பிடித்து சென்று, குடியேற்றத்துறையின் கீழ் உள்ள மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், மிகப் பெரிய அவதி ஏற்பட்டுள்ளதாக, குருகிராம் நகர மக்கள் கூறுகின்றனர். ஏனெனில், குருகிராம் பகுதிகளில் சுகாதார பணிகளில் ஈடுபடும் பெரும்பாலான மக்கள் பெங்காலி மொழி பேசுபவர்கள் தான். வெளிநாடான வங்கதேசத்தை சேர்ந்த பலரும், பெங்காலி மொழியையே பேசுவதால், தாங்களும் தவறாக, வெளிநாட்டினர் என கருதி கைது செய்யப்படுவதாக, பெங்காலி மொழி பேசும் மேற்கு வங்க மக்கள் கருதுகின்றனர். அஞ்சு காடூன் என்ற பெண் இதுகுறித்து கூறும் போது,''நான், பத்தாண்டுகளுக்கும் மேலாக என் கணவருடன் குருகிராமில் தங்கியுள்ளேன். என் கணவர் பணியாற்றும் இடத்திற்கு சென்ற குருகிராம் போலீசார், அவர் பெங்காலி மொழி பேசுவதால், வங்கதேசத்தவர் என தவறாக கருதி, குடியேற்றத்துறை மையத்தில் அவரை தங்க வைத்தனர். அதை அறிந்த நான் அங்கு சென்று, உரிய ஆதாரங்களை காண்பித்து, வங்கதேசத்தவர் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திய பிறகு என் கணவரை மீட்க முடிந்தது,'' என்றார். அஞ்சு காடூன் போல பல பெண்களும், ஆண்களும், டில்லி மற்றும் அதை ஒட்டியுள்ள குருகிராம் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால், பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல், பல நாட்களாக மலை போல குவிந்து கிடக்கிறது. அதன் பிறகே விசாரித்தால், அந்த பகுதியில் உள்ள மேற்கு வங்க நபரை, மையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ள தகவல் கிடைக்கிறது. இதனால், வங்கதேசத்தவரை விட மேற்கு வங்கத்தை சேர்ந்த, பெங்காலி மொழி பேசும் மக்கள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆதாரங்களை சமர்ப்பித்தால் விட்டு விடுகிறோம்! மத்திய அரசு தெரிவிக்கும் சட்ட உத்தரவை நாங்கள் பின்பற்றுகிறோம். வங்கதேசத்தவர் இல்லை என ஆதாரங்களுடன் நிரூபித்தால், யாரையும் நாங்கள் எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை. மேலும், பிற நாட்டினரை பிடித்து, ஒரு மையத்தில் தான் வைத்துள்ளோம். ஆனால், பிற நாடுகளில் கைது செய்யப்படுகின்றனர். அவ்வாறு நாங்கள் செய்யாமல், உரிய ஆய்வு நடத்திய பிறகு, அவர்களை தொடர்ந்து இங்கேயே தங்க அனுமதிக்கிறோம். அவர்கள் தப்பி வேறு இடங்களுக்கு சென்று விடக் கூடாது என்பதற்காகவே, அவர்களை பிடித்து வைக்கிறோம். அர்பித் ஜெயின், டி.சி.பி., குருகிராம்