ஹனகல் தாரகேஸ்வரா சிவன் கோவில் எண்கோண அமைப்பில் கூரை
கர்நாடகா எந்த அளவுக்கு சுற்றுலாவுக்கு பெயர் பெற்றதோ, அதை அளவுக்கு ஆன்மிகத்திற்கும் பெயர் பெற்றது. மாநிலத்தில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்கள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை என்றாலும், இன்றைக்கும் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இதில் ஒரு கோவில் தான் ஹாவேரியின் ஹனகல்லில் உள்ள தாரகேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.கல்யாண சாளுக்கியர்கள் 10 முதல் 12ம் நுாற்றாண்டு வரை ஆட்சி செய்தபோது, தாரகேஸ்வரா உட்பட ஏராளமான கோவில்களை கட்டினர். ஹொய்சாளா மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்களின் கட்டட கலையால் ஈர்க்கப்பட்டு, தாரகேஸ்வரா கோவிலையும் சிறந்த கட்டட கலையில் கட்டினர். கோவிலுக்குள் உள்ள கூரை எண்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கூரையில் தாமரை வடிவில் கல் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் சவாரி செய்த காளையான, நந்தியை வணங்கும் 12 துாண்களால் தாங்கப்பட்ட மண்டபம்உள்ளது.கோவில் வளாகத்தில் மத மற்றும் ராணுவ காட்சிகளுக்காக செதுக்கப்பட்ட, மூன்று நினைவுக் கற்கள் உள்ளன. விநாயகருக்கு என்று பிரதான கோவிலும் கட்டப்பட்டு உள்ளது.இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், அப்பா... என்ன ஒரு கலைநயம்; எப்படி தான் இப்படி வடிவமைத்தனரோ என்று ஆச்சர்யமாக கூறிச் செல்கின்றனர். கோவிலை பற்றிய வரலாறையும், அர்ச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.பழங்கால கோவில் என்பதால், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் நடை தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.எப்படி செல்வது?பெங்களூரில் இருந்து ஹனகல் 371 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, ஹனகல்லுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்வோர் ஹாவேரியில் இறங்கி, அங்கிருந்து 38 கி.மீ., துாரத்தில் உள்ள ஹனகல்லுக்கு, பஸ் மூலம் செல்லலாம். - நமது நிருபர் -