உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா காங்., வேட்பாளர் பட்டியலால்... புகைச்சல்!

ஹரியானா காங்., வேட்பாளர் பட்டியலால்... புகைச்சல்!

சண்டிகர் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட 'சீட்' மறுக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சுயேச்சையாக போட்டியிடப் போவதாக மிரட்டல் விடுக்கத் துவங்கியுள்ளனர்.ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்., 5ல் தேர்தலும், அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் உள்ள பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சியில் உள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிடும் 67 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை, கடந்த 4ம் தேதி பா.ஜ., தலைமை வெளியிட்டது.

அதிருப்தி

இதில், ஒன்பது சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தலைவர்கள் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் ரஞ்சித் சவுதாலா, பச்சன் சிங் ஆர்யா, எம்.எல்.ஏ., லக் ஷ்மன் நபா உள்ளிட்டோர் பா.ஜ.,வில் இருந்து விலகினர்.இந்த சீட் பஞ்சாயத்து காங்கிரஸ் கட்சிக்கும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட உள்ள 32 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்., தலைமை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில தலைவர் உதய் பான், கட்சியில் நேற்று முன்தினம் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்றுள்ளன.

ராஜினாமா

பஹதுார்கர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., ராஜிந்தர் சிங் ஜூனுக்கு மீண்டும் அதே தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த மூத்த காங்., தலைவர் ராஜேஷ் ஜூன், இதனால் அதிருப்தி அடைந்தார்.காங்.,கில் வகித்து வந்த அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்த அவர், “காங்., தலைமை என்னை ஏமாற்றி விட்டது. எனக்கு அளித்த வாக்குறுதியை பொய்யாக்கிவிட்டனர். பஹதுார்கர் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கி காங்., வேட்பாளரை விட இரண்டு மடங்கு அதிக ஓட்டுகள் பெற்று எம்.எல்.ஏ., ஆவேன்,” என தெரிவித்தார்.அதேபோல, பரோடா சட்டசபை தொகுதியில் சீட் மறுக்கப்பட்ட மூத்த தலைவர் கபூர் சிங் நார்வாலும் தனித்து போட்டியிடுவது குறித்து, இன்று முடிவு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ஹரியானாவின் 10 இடங்களில் ஐந்தில் காங்., வென்றது. இதனால், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி, வெற்றியை பாதிக்காது என காங்., தலைமை உறுதியாக நம்புகிறது.ஆம் ஆத்மியுடனான கூட்டணி உறுதியாகிவிட்டால், வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என, ஹரியானா காங்., நிர்வாகிகள் உறுதியாக நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி