அன்னா ஹசாரேயின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் இறங்கின. இந்த கைது நடவடிக்கை குறித்து சபையில், பிரதமர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கோரி ரகளை செய்தன. எதிர்க்கட்சித் தலைவரை பேசவிடாமல் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் கூச்சலிட்டதால், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
லோக் சபாகாலையில் லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், குருதாஸ் தாஸ் குப்தா, சரத் யாதவ் ஆகிய மூன்று பேரும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து ஹசாரே கைது குறித்து, சபையில் விவாதம் நடத்த வேண்டுமென்று கோரினர். அவர்களது கோரிக்கையும், நோட்டீசும் நிராகரிக்கப்படுவதாக, சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார். இதனால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மட்டும் பேசுவதற்கு அனுமதியளிப்பதாக மீராகுமார் கூறவே, சமாஜ்வாடி கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, 'எங்களுக்கெல்லாம் வாய்ப்பளிக்க மறுப்பது ஏன்' என்று கேட்டு ரகளை செய்தனர்.சுஷ்மா பேச ஆரம்பித்தார். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அறிக்கை வேண்டாம் என்றும், பிரதமர் மன்மோகன் சிங் சபைக்கு வந்து நேரில் விளக்கம் அளித்திட வேண்டும் என்றும் கூறினார். சுஷ்மாவை பேசவிடாமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டுக் கொண்டே இருக்க, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் சபை 11.30 வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போதும் கூச்சல் ஆரம்பிக்கவே, மறுபடியும் 12 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டு, பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்ய சபாவிலும் காலையில் கடும் அமளி ஏற்பட்டது. சபைத் தலைவர் அன்சாரி எவ்வளவோ எடுத்துக் கூறியும், சபையில் அமைதி திரும்பாத நிலை நீடிக்கவே, வேறு வழியின்றி ஒத்திவைக்கப்பட்டது. பிறகு கூடிய போதும் இதே நிலை நீடிக்கவே, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சபையை முடக்க திட்டம்:மதியம் 2 மணியளவில், பார்லிமென்டின் பா.ஜ., அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி ஆலோசனை நடத்தினர். இடதுசாரி கட்சித் தலைவர்கள், சமாஜ்வாடி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அத்வானி, குருதாஸ் தாஸ் குப்தா, ராஜா, யெச்சூரி, தூம், மைசூரா ரெட்டி, சைலேந்திர குமார், ரகுவன்ஸ் பிரசாத், சரத் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.,வும், பகுஜன் சமாஜ் கட்சியும் தலைமையை தொடர்பு கொண்டு, பிறகு தங்களது முடிவைக் கூறுவதாகத் தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.வரும் மூன்று நாட்களுக்கு, பார்லிமென்ட் சபை நடவடிக்கைகளை முற்றிலுமாக புறக்கணிப்பு செய்வது என முடிவெடுக்கலாம் என்று, முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில், இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டது. சபைக்கு நாளை (இன்று) அனைவரும் வரலாம். சபையில் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் மீது முழு விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தி.மு.க., 'ஆப்சென்ட்:'தி.மு.க., எம்.பி.,க்கள் பெரும்பாலும், சபையில் இருப்பதைத் தவிர்த்தபடி இருந்தனர். ஹசாரே கைது விவகாரத்தில் தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவில்லாமல் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால், அ.தி.மு.க.,வினர் எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர். அவர்கள் இதுகுறித்து பின்னர் தெரிவித்தபோது, 'பிரதமர் பதவியை லோக்பால் வரம்பிற்குள் சேர்க்கக் கூடாது என்பதே எங்கள் கட்சி கொள்கை என்பதால், இவ்விஷயத்தில் அமைதி காத்தோம்' என தெரிவித்தனர்.-நமது டில்லி நிருபர்-