உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆமதாபாத்தில் நெஞ்சைப்பிழியும் துயரம்; லண்டன் புறப்பட்ட விமானம் வெடித்துச் சிதறியது; உயிரிழந்த 204 பேர் உடல் மீட்பு

ஆமதாபாத்தில் நெஞ்சைப்பிழியும் துயரம்; லண்டன் புறப்பட்ட விமானம் வெடித்துச் சிதறியது; உயிரிழந்த 204 பேர் உடல் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் பலியானதாக அஞ்சப்படுகிறது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் (போயிங் 787 -8 டிரீம் லைனர்) லண்டனுக்கு மதியம் 1:38 மணிக்கு கிளம்பியது. புறப்பட்ட 32 வினாடிகளிலேயே இந்த விமானம், விமான நிலையம் அருகே இருந்த மருத்துவ கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து நொறுங்கியது.விமானம் அதிகபட்சமாக 825 அடி உயரம் மட்டுமே சென்றிருந்தது; அதற்கு மேல் பறக்க முடியாமல், கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. வழக்கமாக விமானம் பறக்கத் தொடங்கியவுடன், அதன் லேண்டிங் கியர் (டயர்) மேலே (உள்ளே) இழுத்துக் கொள்ளப்படும்.ஆனால் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லேண்டிங் கியர் அப்படியே வெளியே நீட்டிக் கொண்டிருந்தது வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mtzi1q7d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விமானத்தில் பயணித்தவர்கள்

விபத்துக்குள்ளான போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த 7 பேர் பயணித்தனர். அவர்களுடன் 12 ஊழியர்களும் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.

204 சடலம் மீட்பு

தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சிலரது சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளன. அவற்றை உறவினர்கள் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் கண்டறிய மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் மரணம்

இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்துள்ளார். அவர், லண்டனில் இருக்கும் தன் குடும்பத்தினரை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்ற நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் உயிர் இழந்து விட்டதாக, இன்று இரவு 7 மணியளவில் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

டிஜிசிஏ விளக்கம்

விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ எனப்படும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கினர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார். இந்திய நேரப்படி 1: 39 மணிக்கு விமானம் 23வது ஓடுபாதையில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு(ஏடிசி) அவசர அழைப்பு வந்தது. பிறகு, ஏடிசி முயற்சி செய்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஓடுபாதையில் இருந்து கிளம்பிய உடனே விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் கடுமையான புகை மூட்டமாக காணப்படுகிறது. இவ்வாறு டிஜிசிஏ விளக்கம் அளித்துள்ளது.

மருத்துவ மாணவர்கள் பலி

விமானம் நொறுங்கி விழுந்ததில், அந்த இடத்தில் அமைந்திருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர். சுற்று வட்டார குடியிருப்புகளில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.

ஹெல்ப்லைன்

விபத்தை தொடர்ந்து ,ஆமதாபாத் சிவில் மருத்துவமனை அதிர்ச்சி (அவசர) மையத்தில் நோயாளி தொடர்பான தகவலுக்கு தொடர்பு கொள்ள மருத்துவமனை நிர்வாகம், 6357373831, 6357373841 ஆகிய இரண்டு ஹெல்ப்லைன் எண்கள் வெளியிட்டுள்ளது.போர்ச்சுக்கல்லிலும் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பெற அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது. பிரிட்டனுக்கான இந்திய தூதரகமும் உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

பிரதமர் ஆலோசனை

விமான விபத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அவர்களை ஆமதாபாத் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் ஆய்வு:ஆமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார், நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.மேலும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என நிருபர்களிடம் தெரிவித்தார்.

டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு

ஆமதாபாத் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பிறகு விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், காயமடைந்தவர்களையும் சந்தித்தார். இதன் பிறகு அவர் கூறியதாவது: விபத்து நடந்த 10 நிமிடத்தில் என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.உயிர் பிழைத்தவரை சந்தித்தேன். உயிரிழந்த வெளிநாட்டினரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவம் அறிந்து ஒட்டு மொத்த தேசமும் அதிர்ச்சியில் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்போம். டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடல்களை அடையாளம் காணும்பணி நடக்கிறது. இது முடிந்த பிறகே பலி எண்ணிக்கை உறுதி செய்யப்படும். விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமானம் வெடித்ததும், எரிபொருளில் எரிந்ததால் அதிக வெப்பம் ஏற்பட்டது. இதனால், ஒருவரை கூட காப்பாற்ற முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இரங்கல்

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிதலைவர் ராகுல் உள்ளிட்ட இந்திய தலைவர்கள், பல மாநில முதல்வர்கள், மற்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் , கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸி., பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், பிரிட்டன் மன்னர் சார்லஸ் , அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,இத்தாலி பிரதமர் மெலோனி, வங்கதேச அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ், உள்ளிட்ட உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ரூ.1 கோடி நிவாரணம்

டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்பதுடன், அவர்களுக்கு தேவையான உதவி செய்து தரப்படும். பிஜே மருத்துவ கல்லூரி விடுதியை கட்டுவதற்கு தேவையான உதவியையும் செய்வோம் என தெரிவித்து உள்ளார்.

உயிர் பிழைத்த அதிசயம்

இத்தனை பேர் உயிரிழந்த இந்த விமான விபத்தில், ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. 38 வயதான நபர் ஒருவர் உயிர் தப்பினார். ரமேஷ் விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.

டிஎன்ஏ பரிசோதனை

உயிரிழந்தவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

போயிங் கருத்து

இந்த விபத்து தொடர்பாக போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ' ஏர் இந்தியா நிறுவனத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறேம். உதவ தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்து உள்ளது.

உதவ தயார்

விபத்து தொடர்பாக இந்திய விமான விபத்து புலனாய்வு குழுவுக்கு உதவ தயாராக உள்ளதாக பிரிட்டன் விமான விபத்து குறித்த விசாரணை பிரிவினர் தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் பயணிகளும் இறந்துள்ளதால், இந்த உதவியை அவ்கள் செய்ய முன்வந்துள்ளனர். இதற்கான குழுவை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

எல்லாம் அவன் செயல்!

விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் செல்ல வேண்டி பூமி சவுகான் என்ற பெண் பயணி, வெறும் 10 நிமிடங்களில் விமானத்தை தவறவிட்டார். அகமதாபாத் போக்குவரத்து நெரிசலால் தாமதமானதால் உயிர் தப்பியுள்ளார். தெய்வீக பலமே தனது உயிரைக் காப்பாற்றியதாக பூமி சவுகான் தெரிவித்து உள்ளார்.

சிஇஓ வருத்தம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் கூறியதாவது: விமான விபத்து சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏர் இந்தியாவில் அனைவருக்கும் இன்றைய நாள் மிகவும் கடினமான நாள். தற்போது, பயணிகள், ஊழியர்கள், குடும்பத்தினருக்கு உதவுவதில் தான் எங்களின் கவனம் உள்ளது. நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கு தற்போது பதில்அளிக்க முடியாது. அனைத்து அவசர கால மீட்பு படையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். விசாரணை நடக்க காலம் எடுக்கும். தற்போது எங்களால் செய்ய முடிந்ததை நாங்கள் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் நாளை ஆய்வுவிமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நாளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தாமரை மலர்கிறது
ஜூன் 13, 2025 00:52

அஹமெடபாதில் உயிரிழந்த பயணிகளுக்கு தலா பத்து கோடி ரூபாய் கொடுப்பது, மிக அவசியம்.


உண்மை கசக்கும்
ஜூன் 13, 2025 00:31

இந்த விபத்து நடந்த அதே நேரத்தில் நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள வக்கீல் கும்பல் , அத்தனை பயணிகளின் விவரங்களை சேர்த்து, அனைவரது குடும்பத்திடமும் பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்து இருக்கும். பிணம் திண்ணி கழுகுகள். ஒவ்வொரு பயணிக்கும் 20 மில்லியன் டாலர் ₹200 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏர் இந்தியாவை மிரட்டும். அந்த பணத்தில் 40% அந்த கும்பல் அடித்து விடும்.


Saai Sundharamurthy AVK
ஜூன் 12, 2025 22:48

ஆழ்ந்த வருத்தங்கள் !!!


Yaro Oruvan
ஜூன் 12, 2025 22:34

மிகவும் வருத்தமான செய்தி.. விபத்தில் இறந்தவர் ஆத்மா சாந்தி அடையட்டும் .. அவர்களது குடும்பத்தார்க்கு இதை தாங்கி கொள்ள வலிமையை இறைவன் தரட்டும்..


C.Jeyabalan
ஜூன் 12, 2025 22:21

ரமேஷ் விஸ்வாஸ் குமார் உயிர் பிழைத்தது மாபெரும் அதிசயம் இப்பெரும் துயரத்திலும் ஒரு சிறு ஆறுதல். அந்த சில நிமிடஙகளில் என்ன நடந்தது என்பதை அவரால் சொல்ல இயலும் இது விபத்திற்கான காரணத்தை அறிய உதவலாம். உயிர் நீத்த நம் சகோதர சகோதிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். எல்லையறு பரம்பொருள், இப்போது துயரத்தில் வாடும் அனைத்து குடும்பத்தினர்களையும் இந்த பெரும் துயரினின்று விடுவிக்க வேண்டிக்கொள்வோம்


THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
ஜூன் 12, 2025 22:18

டாடா சொன்ன கைகளை கீழே இறக்குமுன் இறந்துவிட்டீர்களே உங்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்


theruvasagan
ஜூன் 12, 2025 22:15

மிகவும் துயரமான நிகழ்வு. உயிர் இழந்தோர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


Vel1954 Palani
ஜூன் 12, 2025 22:09

நெஞ்சை பிழியும் துயர செய்தி. அவர்களது ஆன்மாக்கள் சாந்தி அடைய பிராத்திப்போம் .


சோலை பார்த்தி
ஜூன் 12, 2025 22:08

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய கடவுளை பிரார்த்திப்போம்...


Sureshkumar
ஜூன் 12, 2025 21:55

ஆழ்ந்த அனுதாபங்கள்