ஹிமாச்சலில் தொடர்ந்து வெளுத்து வாங்கும் கனமழை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் மழை தொடர்ந்து மிரட்டி வரும் நிலையில், மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.ஹிமாச்சலப் பிரதேசத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்கிறது. மேக வெடிப்பு காரணமாக மண்டி உட்பட மூன்று மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழையால் 566 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுஉள்ளதாக மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. சேதங்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடப்பதால் இது 700 கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என, காங்கிரசைச் சேர்ந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.இந்நிலையில் நேற்று கங்க்ரா, சிர்மூர், மண்டி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை மையம், 'ரெட்' அலெர்ட் விடுத்தது. மேலும் ஏழு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மண்டி மாவட்டம் சில்பாதானி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக நேற்று பெய்த கனமழையில் சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன் சிறிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.பருவமழை துவங்கிய ஜூன் 20 முதல் மாநிலத்தில் 74 பேர் இறந்துள்ளனர். இதில் 47 பேர் மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான விபத்துகளில் இறந்துள்ளனர்.
தப்பிய பச்சிளம் குழந்தை
மண்டி மாவட்டத்தின் தல்வாரா கிராமத்தில் நேற்று மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் தன் வீட்டுக்குள் பாய்ந்த வெள்ளத்தை தடுத்து நிறுத்த சென்ற ரமேஷ் குமார், 31, பலியானார். அவரது உடல் இடிபாடுகளில் மீட்கப்பட்டது. அவரை தேடிச்சென்ற அவரது மனைவி ராதா தேவி, 24, மற்றும் மாமியார் பூர்னு தேவி, 59, ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனினும் அவர்கள் உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை.இதற்கிடையே வீட்டில் இருந்த 10 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அது இறந்த ரமேஷ், ராதா தேவி தம்பதியின் குழந்தை என தெரியவந்தது. அந்த குழந்தை, ரமேஷின் உறவினரும் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகுரின் தனிச் செயலருமான பல்வந்திடம் ஒப்படைக்கப்பட்டது.