நிலச்சரிவு, பாலங்கள் சேதத்தால் மீட்பு பணி பாதிப்பு: வட மாநிலங்களில் கனமழை
புதுடில்லி: உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. பருவமழை துவங்கியதை அடுத்து, கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழையும், நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. உத்தராகாண்ட் கனமழை காரணமாக, உத்தராகண்டில் உள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமோலி மாவட்டத்தில் தாமக் ஓடையில் நேற்று ஆர்ப்பரித்துச் சென்ற வெள்ளம், ஜோதிர்மத் - மலாரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பெரிய பாலத்தை அடித்துச் சென்றது. இந்திய - சீன எல்லைக்கு நேரடி அணுகலாக இருந்த இந்த பாலம் உடைந்ததை அடுத்து, 10க்கும் மேற்பட்ட கிரா மங்கள் துண்டிக்கப்பட்டன. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குப்பை காரணமாக, பல முக்கிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. சமோலி - ஜோதிர்மட் இடையில் பனிர்பானி, பாக்லனாலா பகுதிகளில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. க னரக இயந்திரங்களை பயன்படுத்தி, அவசரகால மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. பைரகனாவில் ஏற்பட்ட நிலச்சரிவால், கேதார்நாத்தை சமோலியுடன் இணைக்கும் குண்ட்சமோலி தேசிய நெடுஞ்சாலை மூடப் பட்டுள்ளது. உத்தரகாசியில் யமுனா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஷயனா சட்டியில் உள்ள பாலத்தின் மீது யாரும் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. க னமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், இதுவரை ஐந்து பேர் பலியான நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொ டர்ந்து நடந்து வருகிறது. ஜம்மு - காஷ்மீர் ஜம்மு - காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவால் மூடப்பட்ட ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை அமைக்கும் பணி, மழை காரணமாக தாமதமாகி வரு கிறது. ஜம்முவில் குஜ்ஜர் ந கர் - சித்ராவை இணைக்கும், 'தண்டி சதக்' என, அழைக்கப்படும் முக்கிய வட்ட சாலையில், பாறைகள், கற்கள் நிறைந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல் ஹிமாச்சல் பிரதேசத்தில், இயற்கை பேரழிவு காரணமாக மூன்று தேசிய நெடுஞ்சாலைகள், 822 சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஜூன் 20 - ஆக., 30 வரை மாநிலத்தில் 45 மேகவெடிப்புகள், 95 திடீர் வெள்ளங்கள், 93 நிலச்சரிவு கள் ஏற்பட்டுள்ளன. நை தர் மற்றும் பாக் நீரோடைகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், மணாலி நாகர் - குல்லு சாலை தடைபட்டுள்ளது. இதுவரை, 1,236 டிரான்ஸ்பார்மர்கள், 424 நீர் வினியோக திட்டங்கள் சேதமடைந்துள்ளதாக ஹிமாச்சல் மாநில பேரிடர் அவசரகால மையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் கனமழை காரணமாக, பஞ்சாபின் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், குர்தாஸ்பூர், பதான்கோட், பாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், பெரோஸ்பூர், ஹோஷியார்பூர், அமிர்தசரஸ் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழல் நிலவுகிறது. கனமழை காரணமாக, வரும் 3ம் தேதி வரை மாநிலம் முழுதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எழுதியுள்ள கடிதத்தில், 'வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால், பஞ்சாப் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. 'இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், சீரமைப்பு பணி மேற்கொள்ளவும் 60,000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.
மீட்பு பணியில் ராணுவம்
ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, மலைப் பகுதிகளில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன் படுத்தப்படுகின்றன. இது குறித்து நம் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், 'மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை கொண்டு செல்லவும், பொது மக்களை மீட்கவும் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
இம்மாதமும் மழை அதிகரிக்கும்
இந்த மாதம் இயல்பைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து அதன் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது: நாட்டில் ஜூன் - ஆக., வரை, 74.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சராசரி பொழிவை விட இது, 6 சதவீதம் அதிகம். வழக்கமாக, செப்டம்பரில் மாதாந்திர மழைப்பொழிவு சராசரியாக 16 செ.மீ., ஆக இருக்கும் நிலையில், இது இந்தாண்டு, 109 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இயல்பான அல்லது அதற்கும் அதிகமான மழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உத்தராகண்டில் இந்த மாதம் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. டில்லி, ராஜஸ்தானில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். சத்தீஸ்கரின் மஹாநதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
15 நாள் பச்சிளங்குழந்தை மீட்பு
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டம் தங்காய் கிராமத்தில், 15 நாட்களுக்கு முன் அறுவைச் சிகிச்சை வாயிலாக குழந்தை பிரசவித்த பெண், வெள்ளத்தில் பாதி மூழ்கிய கட்டடத்தின் முதல் தளத்தில், நான்கு நாட்களாக சிக்கித் தவித்தார். தகவலறிந்த ராணுவ வீரர்கள், ஏணி வாயிலாக முதல் தளத்துக்குச் சென்று, கைக்குழந்தை மற்றும் பெண்ணை மீட்டனர். அங்கிருந்து படகில், 3 கி.மீ., துாரம் அழைத்து சென்று, 15 கி.மீ., துாரம் சூழ்ந்திருந்த வெள்ளத்தில் லாரியில் இருவரையும் வீரர்கள் அழைத்துச் சென்றனர். பின், அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.