மொஹல்லா ஊழியர்களுக்கு அவகாசம் உயர் நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தல்
புதுடில்லி:ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு முன், இரண்டு மாத அவகாசம் வழங்க வேண்டும் என டில்லி அரசுக்கு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தலைநகர் டில்லியில், ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் மொஹல்லா கிளினிக்குகள் துவக்கப்பட்டன. இந்தக் கிளினிக்குகளில், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன், மொஹல்லா கிளினிக்குளை மூட பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மொஹல்லா கிளினிக் ஊழியர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தங்களை பணி நீக்கம் செய்யவும், வேறு ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க தடை விதிக்கவும் வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனு, நீதிபதி பிரதீக் ஜலான் முன் விசாரணைக்கு வந்தது. ஊழியர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமர் நாத் சைனி, “பல ஊழியர்களுக்கு போன் செய்து வேலைக்கு வர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளனர்,” என்றார். டில்லி அரசு வழக்கறிஞர், 'மொஹல்லா கிளினிக் ஊழியர்கள் நியமனத்தை ரத்து செய்ய இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றார். நீதிபதி பிரதீக் ஜலான், “மொஹல்லா கிளினிக் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு முன், அவர்களுக்கு டில்லி அரசு இரண்டு மாத அவகாசம் வழங்க வேண்டும்,” என, உத்தரவிட்டார். கடந்த, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லியில், 533 மொஹல்லா கிளினிக்குகள் இருந்தன. ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட மொஹல்லா கிளினிக்குகளை, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 'ஆரோக்ய மந்திர்'களாக பா.ஜ., அரசு மாற்றி வருகிறது. மொஹல்லா கிளினிக் ஊழியர்கள் மே,17ம் தேதி போராட்டம் நடத்திய போது, தற்போது பணியில் உள்ள மருத்துவ ஊழியர்கள், ஆரோக்ய மந்திர்களுக்கு மாற்றப்படுவர் என உறுதியளித்திருந்தார்.