ஜாமின் வழக்கில் ஈ.டி.,க்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு
புதுடில்லி, 'சட்டப் பிரிவுகள் தெரியாமல் எப்படி ஆஜராகிறீர்கள்' என, பண மோசடி வழக்கில் ஜாமின் கேட்டு பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த 'ஷைன் சிட்டி' குழும நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து முதலீடுகள் பெற்று மோசடி செய்தது. இந்த வகையில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை விசாரிக்கிறது.இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரஷீத் நசீம் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், அவருக்கு மிகவும் நெருக்கமானவரான அரசுப் பள்ளி ஆசிரியை சசி பாலா என்பவரை அமலாக்கத் துறை கைது செய்தது. மோசடியில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக, 36 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.ஜாமின் கேட்டு சசி பாலா தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு கூறியுள்ளதாவது:கடந்த 2023 நவம்பரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய நிலையில், இந்த வழக்கில் எப்போது விசாரணை முடியும் என்பது நிச்சயமில்லாதது. தேவையில்லாமல் ஒருவரை சிறையில் அடைப்பதை ஏற்க முடியாது என, உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது.மேலும், பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவின்படி, 16 வயதுக்கு கீழுள்ளோர், பெண்கள், நோயாளிகள், மருத்துவமனையில் உள்ளோர் ஆகியோருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், இவருக்கு ஜாமின் வழங்க அமலாக்கத் துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஜாமின் கொடுத்தால் கடுமையான நிபந்தனைகளை விதிக்கும்படி கூறியுள்ளது. சட்டப் பிரிவுகள் பற்றி தெரியாமல், மத்திய அரசு சார்பில் நீங்கள் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகிறீர்கள் என்பது புரியவில்லை.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஜாமின் வழங்கி அமர்வு உத்தரவிட்டுள்ளது.